பதிவு செய்த நாள்
10
டிச
2021
10:12
சென்னை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும் துவக்கப்படும் தகவல் மையங்களை, இந்த ஆண்டும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, ஆண்டுதோறும் அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில், தேனி - குமுளி சாலையில் உள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன் கோவில், குற்றாலத்தை அடுத்த புளியரையில் உள்ள நெற்களஞ்சியம், கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், கோவை- பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்கா பிராட்டியம்மன் கோவில், பொள்ளாச்சி- - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரம், பத்ரகாளி அம்மன் கோவிலிலும், தகவல் மையங்கள் துவக்கப்பட்டன. இந்த ஆண்டு கன மழைக்கு பின், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, விரைவில் தகவல் மையங்கள் குறித்த அறிவிப்பை, அறநிலையத் துறை வெளியிட்டால் வசதியாக இருக்கும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.