பதிவு செய்த நாள்
03
ஜன
2022
11:01
கூடலூர்: கூடலூர், அருகே அடர்ந்த வனத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பழமையான விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் கீழ்நாடுகாணி தமிழக - கேரளா எல்லை அருகே, அடர்ந்த வனப்பகுதியில், கேரளா செல்லும் நிலம்பூர் சாலையிலிருந்து 3 கி.மீ., தொலைவில், பல நூற்றாண்டுகள் முன், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பழமையான விநாயகர் சிலை உள்ளது. இதன் பின் பகுதியில், சிவன் யோக நிலையில் அமர்ந்து இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது.
பழமையான, கோயிலுக்கு, ஆண்டு தோறும், ஜன., 1ம் தேதி நாடுகாணியை சேர்ந்த பக்தர்கள், வனத்துறை அனுமதி பெற்று, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி பக்தர்கள் நேற்று முன்தினம், அந்த கோயிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றனர். அங்கிருந்த விநாயகர் சிலை, சேதப்படுத்தப்பட்டு சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உடைந்த விநாயகர் சிலையை, தற்காலிகமாக சீரமைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். தகவலறிந்த, உளவுதுறை போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று, அந்த சிலையை ஆய்வு செய்தனர். ஆய்வில், சிலையை முழுமையாக சேதப்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். பக்தர்கள் கூறுகையில், பல நூற்றாண்டு பழமையான இந்த சிலையை மர்ம நபர்கள், சேதபடுத்தி உள்ளனர். அடர்ந்த வனத்தின் நடுவே திறந்த வெளியில் இருக்கும் இந்த சிலை புதையலுக்காக சேதப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறினர்.