பதிவு செய்த நாள்
11
ஜன
2022
01:01
உ.பி., மாநிலம், வாரணாசி லோக்சபா தொகுதியில், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, இந்தியாவின் ஆன்மிக தலைநகராக வாரணாசியை மாற்றி காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை ஏழு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றியுள்ளார். அந்த அளவுக்கு காசி விஸ்வநாதர் கோவிலையும், காசி நகரத்தையும் முற்றிலுமாக புதுப்பித்துள்ளார். பல ஆண்டுகளாக 3,000 சதுரடி பகுதிக்குள் சிக்கி தவித்த காசி விஸ்வநாதர் கோவில் தற்போது, 5 லட்சம் சதுரடி பரப்பளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தினமும், 50 - 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவுக்கு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
கங்கையில் நீராடி, கங்கை நீருடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரடியாக செல்ல முன்பு இருந்த பாதை, ஆக்கிரமிப்பில் காணாமல் போனது. அந்த பாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி இருந்த 300 வீடுகள், 1,400 கடைகள் எந்த வித எதிர்ப்பும், வழக்கும் இன்றி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்தவர்களுக்கு போதிய அளவு பணம் கொடுத்து பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகளை வைத்து இருந்தவர்களுக்கு, இழப்பீடாக 386 கோடி ரூபாயும், புணரமைப்பு பணிக்கு 489.50 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.கோவிலுக்குள் சென்று வர விஸ்தாரமாக நான்கு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காசியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள சுனார் என்ற ஊரில் இருந்து சிவப்பு நிற கற்கள் கொண்டு வரப்பட்டு கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் மக்ரானா ரக பளிங்கு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிச., 12ம் தேதி பிரதமர் மோடி, புணரமைக்கப்பட்ட காசி விசுவநாதர் கோவிலை திறந்து வைத்த போது அனைவரது நெஞ்சமும் பெருமிதத்ததால் நிரம்பி வழிந்தது.