பதிவு செய்த நாள்
12
ஜன
2022
10:01
தமிழகத்தில், சூரியன் மறைவதற்குள் தை மாதம் பிறப்பு ஏற்படும் மாவட்டங்களில், 14ம் தேதியும், மற்ற இடங்களில் 15ம் தேதியும் பொங்கல் பானை வைக்கலாம் என, காஞ்சி சங்கர மடம் கூறி இருக்கிறது. நம் பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் உள்ள சூரியன், தன்னைத் தானே சுற்றியபடி, அதன் சுற்றுப் பாதையிலும் சுற்றுகிறது. சுற்றுப் பாதையின் ஒரு முறையிலான சுழற்சியை 12 மாதங்களில், சித்திரையில் துவங்கி பங்குனியில் முடிக்கிறது. முக்கியத்துவம்இப்படிப்பட்ட சுழற்சி யில் நான்கு திசைகளுக்கும் நான்கு மாதங்கள் என்ற கணக்கில், தை மாத துவக்கத்தில், வடக்கு நோக்கி நகர்கிறது. இதை மகர சங்கராந்தி - சூரியன் வடக்கு நோக்கி நகர்தல் என்று அழைக்கிறோம்.
இந்தப் பருவ காலத்தில், நம் வாழ்வை செழிக்க வைக்கும் சூரியனுக்குப் படையல் இடும் வழக்கத்தை, ஆண்டுதோறும் பின்பற்றி வருகிறோம். கதிர் அறுத்து, புது நெல் கிடைக்கும் மாதம் என்ப தால், தை மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பொதுவாக மாதப் பிறப்பு, சூரிய உதய நேரத்தை ஒட்டியே அமையும். இந்த ஆண்டு தை மாதம், வரும் 14ல், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிறப்பதால், சூரியனை வழிபடுவதில் தடையும், பொங்கல் வைக்க சரியான நேரம் கிடைக்காததுமாக அமைகிறது. மாதப் பிறப்பில் திதி கொடுப்பவர்களுக்கும், சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது குறித்து விவாதிக்க, காஞ்சி காமகோடி பீடத்தின், வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபை கூடியது.
அதில் விவாதிக்கப்பட்டதாவது: திருக்கணித பஞ்சாங்கக்குறிப்புப்படி, ஜன., 14ம் தேதி பிற்பகல் மாதப்பிறப்பு ஏற்பட்டு விடுவ தால், அன்றே மகர சங்கராந்தி புண்ய காலம் ஆரம்பிக்கிறது. ஆனால், வாக்கிய பஞ்சாங்க குறிப்புப்படி, மாலை சூரியன் மறைவதற்கு நெருங்கி மாத பிறப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. மாதப் பிறப்பு கணக்கு, ஊருக்கு ஊர் மாறுபடும்.இந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் வடக்கே உள்ள சென்னை, எண்ணுார், மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, வேலுார், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஓசூர் ஆகிய பகுதிகளில், வரும் 15ம் தேதி தை மாத சங்கராந்தி நேரம் துவங்குகிறது. அதேபோல, மதுராந்தகம், திண்டிவனம், வந்தவாசி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட தமிழகத்தின் எஞ்சிய அனைத்து பகுதிகளில், ஜன., 14ம் தேதியே சங்கராந்தி நேரம் துவங்குகிறது.
புண்ணிய காலம்: கர்நாடகாவின் மைசூரு, கொள்ளேகால், மடிக்கேரி பகுதிகளிலும், கேரளத்தின் பெரும்பாலான பகுதி களிலும் ஜன.,14 தான் புண்ய காலம் ஆரம்பம். ஆனால், பெங்களூரு உட்பட கர்நாடகத்தின் மற்ற பகுதிகளிலும், நாட்டின் மற்ற மாநிலங்களிலும் ஜன.,15 தான் புண்ணிய காலம் என, வாக்கிய கணித முறைப்படி தெரிய வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், அவரவருக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் மகர சங்கராந்தி கொண்டாடலாம்; திதி கொடுக்கலாம். ஆகவே, இம்மாதம், 15ம் தேதி திதி கொடுக்கும் ஊர்களில், 14ம் தேதி போகி பண்டிகையும், 16ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாட வேண்டும்.இவ்வாறு அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. -- நமது நிருபர் -