பதிவு செய்த நாள்
13
ஜன
2022
01:01
சென்னை:அரசு ஊழியர் போல், கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவும், பொங்கல் கருணைக் கொடை 1,000 ரூபாயை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள கோவில்களில் நிரந்தரப் பணியாளர்களுக்கு, இம்மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து, 31 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு, 2,500 ரூபாய்; காவல் பணியாளர்களுக்கு 2,200; துாய்மைப் பணியாளர்களுக்கு 1,400 ரூபாய் மாதச் சம்பளம் உயரும். இதனால், கோவில்களில் பணிபுரியும் 10 ஆயிரம் நிரந்தர பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.அரசு ஊழியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல், அறநிலையத் துறை கோவில் பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் பொங்கல் கருணைக் கொடை வழங்கப்படுவது உண்டு. இதை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இவ்வாண்டு 1.50 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.