பதிவு செய்த நாள்
23
ஜன
2022
03:01
தஞ்சாவூர்: தியாகராஜ சுவாமிகளின் 175வது ஆண்டு ஆராதனை விழாவில், பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்று இசையஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து நேற்று காலை ௬:௩௦ மணிக்கு இசைக் கலைஞர்கள் உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, முக்கிய வீதிகள் வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர்.தொடர்ந்து, தியாக பிரம்ம மகோத்சவ சபைத் தலைவர் வாசன், விழாவை துவக்கி வைத்தார். தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன.
தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன், பாடகர்கள் மஹதி, விசாகாஹரி. கடலுார் ஜனனி, சுசித்ரா, அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உட்பட இசைக் கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தபடி, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, உபன்யாசம் நடந்தது. மாலையில் தியாகராஜர் உருவச் சிலை ஊர்வலம், ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், குறைந்தளவிலான இசைக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.