பதிவு செய்த நாள்
05
பிப்
2022
05:02
திருப்பூர் : திருப்பூர் அருகே பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். திருப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் சீனிவாசனுக்கு சொந்தமான தோட்டம், பெருந்தொழுவு, தங்கையன்புதுாரில் உள்ளது. அங்கு நேற்று, பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
வாசவி கிளப் கேலக்ஸி கிளப் தலைவர் ஸ்ரீமதி, செயலர் லட்சுமி, பொருளாளர் பிரியா ஆகியோர், வளைகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பசு மாட்டுக்கு, உடல் முழுவதும் மஞ்சள் பூசி, குங்கும் வைத்து, பட்டு வேட்டி மற்றும் பட்டு சேலை அணிவித்து, கொம்புகளுக்கு, வண்ண வளையல்களை அணிவித்து, மலர்மாலைகள் சூட்டி அலங்காரம் செய்திருந்தனர். சீர்வரிசை தட்டுகள் வைத்து, மாட்டுக்கு பழவகைகள் கொடுத்தும், மங்களஹாரத்தி எடுத்தும் வழிபட்டனர். வாசவி கிளப் கேலக்ஸி நிர்வாகிகள் கூறுகையில்,பசுவின் உடலில், அனைத்து தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம். அதன்படி, மகாலட்சுமிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். அனைத்து பெண்களும் சுபிட்சமாக வாழ வேண்டுமென வேண்டி, லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டது என்றனர்.