சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயில் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் செய்து கொள்ள சிறந்த தலமாக இருந்து வருவதால் வாரவிடுமுறையைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை என்பதால் கோயிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதோடு , ஆயிரகணக்கான பக்தர்கள் ராகு - கேது பூஜையில் ஈடுபட்டனர். ஸ்ரீ காளஹஸ்தியில் நேற்று முன்தினம், முதல் இன்றும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் கோயில் வளாகம் மட்டுமன்றி நான்கு மாடவீதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.இதனால் அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களில் தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து இருக்கலாம் என்றனர் . கோயில் விடுதிகள் உள்பட தனியார் விடுதிகளிலும் உணவகத்திலும் (பாஸ்ட்புட் )மற்றும் தெருவோரக் கடைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதின. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் கர்நாடக ,தமிழக எல்லையில் இருப்பதாலும் தென்கைலாயம் ஆக பிரசித்தி பெற்றதால் கோயிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருப்பதி-திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அங்கு திருமலையில் தரிசனத்திற்கு கால தாமதம் ஏற்படுவதால் ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரை தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்களின் கூட்டம் கவனத்தில் கொண்டு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சுயமாக கோயில் ஊழியர்களுடன் இணைந்து கோயிலின் நுழைவாயில் மற்றும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் நடக்கும் மண்டபத்தில் நேரடியாக சென்று பரிசளித்ததோடு கோயில் நுழைவாயில் அருகில் உள்ள ஊழயர்களுக்கு அறிவுரை வழங்கினர்.இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 7.30 -9 ராகு காலம் என்பதால் அதிகாரிகள் எதிர்ப்பார்க்காத வகையில் ஏராளமான பக்தர்கள் ராகு-கேது பூஜையில் ஈடுபட வந்ததால் சிறிது நேரம் ராகு- கேது பூஜையில் பயன்படுத்த படும் வெள்ளி படகுகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிறிது நேரம் பூஜைக்கு தடை ஏற்பட்டது .இதனை அறிந்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் கோயிலுக்கு வந்ததோடு படகுகள் செய்யும் (மின்ட் யில்) உள்ள ஊழியர்களிடம் ஆலோசனை செய்தனர் .சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராகு-கேது பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.