திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2022 03:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப்பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. நாளை (மார்ச் 22) காலை தேரோட்டம் நடக்கிறது. பெற்றோருக்கு வரவேற்பு: பங்குனி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் முடிந்து திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை சுப்பிரமணிய சுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.
திருக்கல்யாணம்: கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் பிரியாவிடை சுந்தரேஸ்வரர் அடுத்ததாக மீனாட்சி அம்மன் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. திருமாங்கல்ய பூஜைக்கு பின்பு சுவாமிகளுக்கு புத்தாடைகள் அறிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை பிரதிநிதியாக சங்கர் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக ரமேஷ் சிவாச்சாரியார் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் நடத்தினர். சுப்ரமணிய சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு ரோஸ் பட்டு சாத்துகுடியானது. மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் மதியம் 12:45 மணிக்கு நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தபின்பு தீபாராதனைகள் நடந்தது.