பதிவு செய்த நாள்
24
மார்
2022
05:03
பாலக்காடு: உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சளவராவில் உள்ள குபேரர் கோவில் சிறப்பு மகா யாகம் 7 ஏப்., 17 முதல் 23-தேதி வரை நடைபெறுகிறது. இந்த மகா யாகத்திற்காக புனித மண் பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் கோவை ஆர்ய வைத்ய சாலை தன்வந்திரி கோவிலில் இருந்து வைத்திய சாலையின் செயல் இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் வாரியரால் ஊர்வலமாக வாளையாருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்த மண் தேரில் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உள்ள கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு காலை 7.30 மணிக்கு சம்பூஜ்ய தயானந்தாஸ்ரமம் ஓலச்சேரி மடாதிபதி சுவாமி கிருஷ்ணாத்மானந்த சரஸ்வதியால் (தர்மாச்சார்ய சபையின் மாவட்டத் தலைவர்) குபேரர் கோவில் நிர்வாக அறங்காவலரும் இந்த ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஜித்தின் ஜெயகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த புனித மண் நாளை யாகபுரியில் வந்து சேரும்.
இது குறித்து அக்கோவிலின் அறங்காவலர் ஜித்தின் ஜெயகிருஷ்ணன் கூறுகையில்: பத்ரிநாத் கோவில் குபேரனை வழிபடுவதற்கான மிக முக்கியமான கோவிலாகும். மேலும் இங்கு விஷ்ணுவிற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக குபேரர் உள்ளார். அழகாபுரி என்னும் குபேரனின் ராஜ்யமானது செல்வச் செழிப்புடன் திகழ்கிறது. இது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் அருகே உள்ளது. அங்கு எனக்கு கிடைத்த உத்வேகமே கடந்த ஆண்டு இங்கு குபேரர் கோவில் உருவாக முக்கிய ஒன்றாக அமைந்தது என்று தெரிவித்தார்.
பாண்டுகேஷ்வர் பகுதியானது இயற்கை வளம் நிறைந்த பகுதியாகும். குபேரனின் ஆசீர்வாதத்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு வறுமை என்பதே தெரியாது. இதனால் அங்கிருந்து மண்ணை கொண்டு வருவதன் மூலம் இங்குள்ள மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாகும். மேலும் இது காலத்தின் கட்டாயமும்கூட. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட இந்த புனித மண் யாகக்குண்டங்களின் அடியில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு இன்னல்களால் மக்கள் அவதிப்பட்டனர். அவர்களுக்கான சிறந்த விமோச்சனமாக தற்போது நடைபெற உள்ள இந்த மகா குபேர யாகம் இருக்கும். 700 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த யாகம், ‘வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடி’ என்ற மந்திரத்துடன், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகப் பொருளாதார அமைதியையும் செல்வத்தையும் கொண்டு வரவிருக்கிறது. சோம யாகம் மற்றும் அதிராத்திரம் ஆகிய இரண்டையும் செய்த புகழ்பெற்ற வைதிகர் செருமுக்கு வல்லபன் அக்கித்திரிபாடு தலைமையில் மகா குபேர யாகம் நடைபெற உள்ளது. இங்கு சங்கநிதி மற்றும் பத்மநிதியுடன் இணைந்து குபேரன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இந்த கோவிலில் செல்வங்களின் அதிபதியான குபேரர் தவிர, லட்சுமி வினாயகர், கனகதாரா (மகாலட்சுமி) தேவி மற்றும் ராஜகோபாலன் (கிருஷ்ணர்) சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பு வாய்ந்த பூஜையான தன வாஹினி பூஜை நடைபெறுகிறது. யக்ஷர்களின் ராஜாவாக, குபேரன் பூமி, மலைகள், கனிமங்கள் மற்றும் பூமிக்கு அடியில் உள்ள நகைகளின் இறைவனாகவும், எஜமானாகவும் கருதப்படுகிறார். புத்த மற்றும் ஜைன மதங்கள் உட்பட அனைத்து ஒருமித்த தத்துவங்களிலும் செல்வத்தின் அதிபதியான குபேரர், எல்லையில்லாத செல்வம் மற்றும் வளங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவராக இருக்கிறார். இந்த மகா குபேர யாகத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு செல்வ வளத்தின் பாதுகாவலராக திகழும் குபேரன் வைத்திருக்கும் நிதி கும்பம் பிரசாதமாக வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சங்க நிதி மற்றும் பத்மநிதியுடன் கூடிய தெய்வீக யந்திரம் வழங்கப்படும். இது குடும்பத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும் ஒரு யந்திரமாகும். இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பெயர் மற்றும் ஜன்ம நட்சத்திரம் ஆகியவை எழுதப்பட்டு குபேரனின் பாதத்தில் வைக்கப்படும். பூஜை முடிந்த பிறகு விபூதி பிரசாதம் தவிர குபேரனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு தெய்வீக நாணயமும் வழங்கப்படும். மேலும் எப்படி எந்த திசையில் அமர்ந்து குபேரனை வழிபட வேண்டும் என்பது பற்றி பக்தர்களுக்கு சொல்லித் தரப்படுவதோடு குபேர மந்திரமும் பக்தருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.