பதிவு செய்த நாள்
24
மார்
2022
05:03
அவிநாசி : இரண்டு ஆண்டுகளுக்கு பின், கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம், விமரிசையாக நடந்தது.
அவிநாசி, கருவலுாரிலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 8ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. 19ல் கொடியேற்றம் நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, புஷ்ப விமான பல்லக்கில், அம்மன் எழுந்தருளினார். அம்மன் அழைப்பை தொடர்ந்து, திருக்கல்யான உற்சவமும், யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று துவங்கியது.நேற்று காலை 6:00 மணிக்கு தங்க காப்பு அலங்காரத்தில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். நுாற்றுக்கணக்கானோர் மத்தியில், தேர் அசைந்தாடி வந்தது. தேர், முதல் நிலையை அடைந்ததும், பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.இன்றும் தேரோட்டம் நடக்கிறது. நாளை, இரவு 10:00 மணிக்கு தெப்ப உற்சவமும், காமதேனு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வும், தொடர்ந்து, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டையும் நடக்கிறது.27ம் தேதி, மகா தரிசனம், மஞ்சள் நீராடல், கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. வரும் 30ம் தேதி மறுபூஜை, பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.