பதிவு செய்த நாள்
03
ஏப்
2022
14:40
கார்த்திகை 2,3,4ம் பாதம்: அதிர்ஷ்ட காலம்
சுக்கிரனை ராசி நாதனாகவும், சூரியனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டவர்கள் நீங்கள். வளமான வாழ்க்கையும், சுகமான சிந்தனைகளும், கவுரவமான வாழ்க்கையுமே உங்களின் நோக்கமாக இருக்கும். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜென்ம ராகுவும், ஏழாமிடத்துக் கேதுவும் சோதனைக்கு மேல் சோதனை என உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினர். கடந்த ஆறு மாதமாக பத்தாமிடத்து குருவும் உங்களைப் படாத பாடு படுத்தி வந்தார். அதனால் திரும்பிய பக்கமெல்லாம் நெருக்கடிக்கு ஆளானீர்கள். 2022 மார்ச் 21ல் ராகு உங்கள் ராசியை விட்டு மேஷத்திற்கும், கேது உங்கள் ராசிக்கு 6 ஆம் வீடான துலாத்திற்கும் பெயர்ச்சியாகி உங்களின் சிரம நிலையில் மாற்றத்தை உண்டாக்க, 2022 ஏப்.13ல் குரு லாப ஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாகி யோகம் தரவுள்ளார். சங்கடம் வரும் போது மொத்தமாக வருவது போல் அதிர்ஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வர இருக்கிறது. ஒரு பக்கம் ஆறாமிடத்து கேது எதிர்ப்பு இல்லாத நிலையை உங்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்த, மறுபக்கம் லாப குரு நன்மை, பொருள் வரவுகளை வழங்கி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல இருக்கிறார். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
நிதி: லாபகுருவால் வரவுகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். அதன் காரணமாக அசையாசொத்து சேரும். குடும்பத்தேவை நிறைவேறுவதுடன் உங்களுடைய சந்தோஷங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். சேமிப்பில் நாட்டம் உண்டாகும். பழைய கடன்கள் அடைபடும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
குடும்பம்: இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் விலகும். கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகும். உறவினர் வகையில் இருந்த பிரச்னை விலகும். சொத்துக்களின் வகையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிரி பிரச்னை இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
கல்வி: மதி காரகனான சந்திரன் உங்கள் ராசியில்தான் உச்சமடைகிறார் அதனால் புத்தி வலிமை உங்களுக்குண்டு. ராகு ராசியில் இருந்து விலகி விட்டதாலும், கேதுவின் பார்வையில் இருந்து விடுபட்டதாலும் குழப்பங்கள் மறையும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் வெற்றி உண்டாகும். பொறியியல், சட்டம், பாலிடெக்னிக் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். படிப்பில் மட்டும் அக்கறை செலுத்தினால் அபார வெற்றி காண்பீர்கள்.
பெண்கள்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவரின் அன்பிற்கு ஆளாவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். மனம் போல திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டிற்குரிய நவீன பொருட்களை வாங்குவீர்கள். 11ம் இடத்து குரு பொருளை அள்ளி வழங்குவதுடன் புதிய நட்பையும் உண்டாக்குவார். தசா புத்திக்கேற்ப நட்பின் எல்லை விரியும். ஏழாம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். இக்காலத்தில் மூத்த சகோதரர்களால் நன்மை காண்பீர்கள்.
உடல்நிலை: உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது ஆரோக்கியத்தை தோற்றுவிப்பார். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆயுள்காரகனால் கண்டம் பற்றிய அச்சம் நீங்கும். வயதுக்கேற்ற நோய்கள், தோல் நோய், ஜலதோஷம் தலைகாட்டும் என்றாலும் சிகிச்சையால் நிவாரணம் உண்டாகும். ஒழுக்கம் பேணுவது மிக அவசியம். இல்லையெனில் அதன் வழியாக உடலில் பாதிப்பு வரலாம்.
தொழில்: இதுவரை முடங்கியிருந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலை மாறும். பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு இட மாற்றம், அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். வேலை வாய்ப்பின்றி இருந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை அமையும். தொழில் தொடங்க வங்கியில் நிதியுதவி கிடைக்கும்.
பரிகாரம்: திருத்தணி முருகனை மனதில் நினைத்து செயல்பட நலமுண்டாகும்.
ரோகிணி: வெற்றி மீது வெற்றிதான்
மனதை ஆளும் சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், இன்பக் காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் எப்போதும் உங்கள் சுய கவுரவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். அதே நேரத்தில் நினைத்ததை சாதிக்காமலும் ஓய மாட்டீர்கள் என்றாலும் கடந்த ஒன்றரை ஆண்டாக பல நெருக்கடிகளையும், சொல்ல முடியாத சங்கடம், அவமானங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். இந்த நிலையில் 2022 ஏப்.13 முதல் திருப்புமுனை உண்டாகப் போகிறது. நினைப்பது நிறைவேறக்கூடிய காலமாக அமையும். மதிப்பும், மரியாதையும் உயர்ந்து பல வழிகளிலும் நன்மைகளைக் காண்பீர்கள். இதுவரை உண்டான இழப்புகளை எல்லாம் மீட்கக் கூடிய அளவிற்கு பணவரவு உண்டாகும். உங்கள் அந்தஸ்து உயர்ந்து புகழ்மிக்கவராக ஆவீர்கள்.
நிதி: லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பொன்னும் பொருளும் நிறையும் காலமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். தடைபட்டிருந்த வருமானம் மீண்டும் வரத் தொடங்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை விரிவு செய்வீர்கள். வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். 12ல் ராகு சஞ்சரிப்பதால் ஆசைகளுக்கு ஆளாகி கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்யாதீர்கள். அதனால் இழப்பு உண்டாகலாம்.
குடும்பம்: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும். கணவன், மனைவி உறவு பலப்படும். பிள்ளைகள் வழியிலும் மகிழ்ச்சி தோன்றும். புதிய வீட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு உண்டாகும். பொதுவாக குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். புதிய நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும் என்றாலும் விரயத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும்.
கல்வி: கேதுவின் பார்வை உங்களை விட்டு விலகி விட்டதால் மனக்குழப்பம் விலகி கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். கலை, அறிவியல் படிப்பில் வெற்றி காண்பீர்கள். மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளில் இடம் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் வெற்றி காண்பர்.
பெண்கள்: உடலிலும் மனதிலும் பொலிவு தோன்றும், சிக்கல்கள், சங்கடங்கள், பிரச்னைகள் என்ற நிலையில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் கூடி வரும். வீட்டில் மழலை சத்தம் கேட்கும். பிள்ளைகளால் நன்மைகள் தோன்றும். அந்நியர்களின் நட்பு சங்கடத்தில் முடியும் என்பதால் புதிய நட்பை தவிர்ப்பது நல்லது.
உடல்நிலை: 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் கேதுவாலும், 6 ஆம் இடத்தைப் பார்க்கும் ஆயுள் காரகன் சனியாலும் நோய்கள் குணமாகும். பல்வலி, தொற்று நோய், அலர்ஜி, உணவுக்குழல் பிரச்னைகள் தோன்றி மறையும். புதிய நோய்கள் வந்தாலும் அவை வந்த வழியே போய்விடும் என்பதால் பயம் வேண்டாம்.
தொழில்: முயற்சியால் செய்துவரும் தொழில் மேலோங்கும். பல வழிகளிலும் லாபம் உண்டாகும். தொழிலில் முழு கவனமும் இருந்தால் அதிகபட்ச லாபத்தை காண முடியும். ஆலோசகர்களின் கை ஓங்கும். கடல் கடந்து சென்று வேலை செய்யக்கூடிய நிலை சிலருக்கு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். சட்டம், பொறியியல், மருத்துவம், திரைப்படத்துறையினர் வெற்றி அடைவர். பெயரும், புகழும், வருமானமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு யோகமான காலம். இக்காலத்தை உங்களின் முயற்சிகளால் சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு நன்மைகள் அளிக்கும். ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வாருங்கள்.
மிருகசீரிடம் 1, 2 பாதம்: நினைத்தது நிறைவேறும்
உங்கள் வாழ்க்கை நலனைத் தவிர்த்து வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நினைத்த இடத்தை அடையக் கூடியவர் நீங்கள். வாழ்க்கையில் தொடர்ந்து யாரும் சங்கடங்களை அனுபவிப்பதில்லை என்ற வார்த்தை உங்களுக்குத்தான் இப்போது பொருந்தப் போகிறது. வேகத்தையும் தைரியத்தையும் வழங்கும் செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும், களத்திரக் காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு சமீப காலத்தில் உண்டான பிரச்னைகளும் சோதனைகளும் அளவற்றவை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் 2022 ஏப்.13ல் 11ம் இடத்திற்கு வரும் குரு வாழ்வில் முன்னேற்றம் தர இருக்கிறார். வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் திறமை பெற்ற நீங்கள், இந்த அதிர்ஷ்ட காலத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
நிதி: லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பொருளாதாரத்தில் உங்களுக்கு முன்னேற்றத்தை அளிப்பார். பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெறும் சனி உங்களுக்கு நிலையான வருமானத்தை உண்டாக்குவார். தந்தையின் நிர்வாகம் உங்கள் கைக்கு வரும். புதிய சொத்துகள், வாகனம் என வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 12ல் சஞ்சரிக்கும் ராகு பல வகையில் ஆசைகளை உருவாக்கி அதில் இழப்பை உண்டாக்குவார் என்பதால் புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 2022 ஆக.8 ல் குரு வக்ரமடைவதால் அதற்குப் பிறகு எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
.
குடும்பம்: குடும்பத்தில் தோன்றி நிலவிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்குள் சந்தோஷம் கூடும். எதிர்பாலினரிடம் உண்டாகும் நட்பின் காரணமாக சில பிரச்னைகள் உருவாகும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டாரத்தில் தோன்றிய எதிர்ப்பு விலகுவதால் குடும்பத்திற்குள் நிம்மதியான நிலை உருவாகும்.
கல்வி: கடந்து காலத்தில் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பொறியியல், மருத்துவம், வரலாறு, இலக்கியம் பயில்பவர்களின் கற்றல் திறன் மேலோங்கும். போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு இது சாதகமான காலம். ஆர்வத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இக்காலத்தில் சாதகமாகும்.
பெண்கள்: குடும்ப உறவுகளால் உண்டான சிக்கல் அகலும். பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் வகையில் நன்மைகள் சேரும் பொன் பொருள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாலினரிடம் நெருக்கத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் யாவும் நன்மையாகும்.
உடல்நிலை: எப்போதும் ஏதாவது பாதிப்பு என்றிருந்த நிலை மாறும். அதிகமாக உணர்ச்சி வயப்பட வேண்டாம். இல்லாவிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்க வாய்ப்புண்டு, இயல்பாகவே உங்களில் ஒருசிலர் நரம்புத் தளர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். வாயு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு தோன்றி மறையும். உணவு விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். 2022 ஆக.8 க்குப் பிறகு உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை.
தொழில்: 6 ல் சஞ்சரிக்கும் கேது எதிர்ப்புகளை அகற்றுவார். சுயதொழில் செய்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி வெற்றி காண்பர். போலீஸ். ராணுவம், நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு பெறுவர். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பணியில் இருந்த பிரச்னைகள் அகலும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் உண்டாகும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை நினைத்து முயற்சிகளை மேற்கொண்டால் வாழ்க்கை நலமாகும்.