பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
09:04
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 94 ஆண்டு பாரம்பரிய விழா சோகத்தில் முடிந்ததால், கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சிவ பக்தர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்ற மூவரில், அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே, திருவாமூர் என்ற ஊரில் பிறந்தார். 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவர் . சிவ பக்தரான அப்பருக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா எடுக்கப்படுகிறது. அப்பர், பங்குனி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக கருத்து நிலவுகிறது. அவர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில், அப்பர் குரு பூஜை நடைபெறுகிறது.
ஆனால் அப்பரோடு தொடர்பில்லாத சிற்றுாரான களிமேடு கிராமத்தில், 94 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அவருக்கு குரு பூஜை விழா நடைபெறுகிறது.
இம்மடம் 150 ஆண்டுகளுக்கு முன், ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது. இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் ஓவியம் உள்ளது. இது, இந்த மடம் அமைவதற்கு முன்பே வரையப்பட்ட, 300 ஆண்டுகள் பழமையான ஓவியம். குரு பூஜை நாளன்று மலர் அலங்காரத்தில், அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் தேவாரப் பாடல்களை இசைத்தபடி அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வதை, மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தாண்டு திருஷ்டி பட்டது போல விழா மிக பெரிய சோகத்தில் முடிந்து விட்டது; கிராம மக்களை நிலைகுலைய செய்துவிட்டது. விபத்து நடந்ததால் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழா ரத்து செய்யப்பட்டு, மடம் பூட்டப்பட்டது.
விபத்துக்கு காரணம்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை தேர் வீதி உலா நடந்தது. உலாவின் போது, தெருக்களில் இருந்து வழக்கமான பிரதான சாலையில், தேர் திரும்பி உள்ளது.ஓராண்டுக்கு முன்பு இந்த சாலை, 1.5 அடி உயரம் உயர்த்தி வேயப்பட்டது. சாலைக்கும், தரைக்கும் இடையே, இந்த இடைவெளி இருந்ததால், தேருடன் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், பள்ளத்தில் இறங்கியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த தேர், உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. புதிதாக போடப்பட்ட சாலை உயரமும், சாலையை ஒட்டிய பள்ளத்தில் ஜெனரேட்டர் இறங்கியதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தென்னங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து உயர்மின் அழுத்த கம்பியில் பாய்ந்த மின்சாரத்தை, உடனடியாக துண்டிக்க முடியாததும், ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தனி தனி விசாரணை: பலியான 11 பேரின் இறப்பு குறித்து, ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் - இன்ஸ்பெக்டர் என, போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரி விளக்கம்: தஞ்சாவூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி பானுப்பிரியா: விழாக்குழுவினர் எந்த அனுமதியும் பெறவில்லை. தேர் புறப்பட்ட இடம், மிகவும் குறுகிய தெரு. தேரில் அலங்கார பொருட்கள், அதிக அளவில் பொருத்தப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தேரின் மேல் பகுதி, மின்கம்பி இருக்கும் பகுதியை கடக்கும் போது, தேரை இழுத்தவர்கள், கவனமாக இழுத்திருக்க வேண்டும். ஆனால், தேர் குறுகிய சாலையில் இருந்து மெயின் ரோட்டிற்கு திரும்பிய போது, பின்னால் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் பழுதாகி, புகை ஏற்பட்டது. இச்சமயத்தில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், தேர் முழுதும் உடனடியாக மின்சாரம் பரவியது. சாலையில் தண்ணீர் இருந்ததால், அங்கிருந்தவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் மரியாதை: விபத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இறந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பின், அவர் நிருபர்களிடம்கூறியதாவது: இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், தமிழக முதல்வர் உடனே எங்களை இங்கே வரச் சொல்லி விட்டார். இதை அரசியலாக்க வேண்டாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊக்கமாக இருந்தவர்: தேர் விபத்தில் பலியான முன்னாள் ராணுவ வீரர் பிரதாபன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிரதாபன் அப்பகுதியில் நன்கு பழகக்கூடிய நபராகவும் இருக்கிறார்.
இளைஞர்கள், படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கூறி, பல்வேறு விளையாட்டு, கலைகளை, சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார். அவருக்கு, கிராமத்து இளைஞர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
பிரியாத நண்பர்கள்: தஞ்சாவூர் களிமேட்டை சேர்ந்த நண்பர்களான பரணி, ராஜ்குமார், சந்தோஷ் ஆகியோர், தேர் திருவிழாவில் பங்கேற்றனர் சாவிலும் பிரியாத நண்பர்கள் மூவரின் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இதில், சந்தோஷின் தந்தை ராஜா, கடந்த டிசம்பரில் இறந்து விட்டார். தற்போதும் சந்தோஷும் விபத்தில் இறந்து விட்டதால், தாய் ரேணுகாதேவி மிகுந்த சோகத்தில் உள்ளார்.
போராடியும் பயனில்லை: விபத்தில் மின்சாரம் தாக்கி வீசப்பட்ட அதிர்ச்சியில், மூச்சு நின்ற பிரதாபன், ராகவன், சாமிநாதன், ராஜ்குமார் ஆகியோருக்கு கிராம இளைஞர்கள், வாயுடன் வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுக்க முயன்றனர். ஆனாலும், அவர்கள் இறந்தது வேதனையை அதிகரித்துள்ளது.
நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: தஞ்சாவூர்- தேர் விபத்தில் பலியான குடும்பங்களுக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கி, ஆறுதல் கூறினார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து களிமேடு கிராமத்திற்கு சென்ற அவர், வீடு வீடாகச் சென்று, இறந்தவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, சட்டசபையில் அறிவித்தபடி தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகையை வழங்கினார். பின்னர், தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்த தேரை பார்வையிட்ட முதல்வர், சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அங்கிருந்து, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இச்செய்தியை கேள்விப்பட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில், தலா 5 லட்சம் ரூபாயும், தி.மு.க., சார்பில் 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என, மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில், 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சரியான காரணத்தை அறிவதற்காகவும், வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் தேவையான வழிமுறைகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்குவதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி இரங்கல்: தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, புதுச்சேரி முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.