பதிவு செய்த நாள்
07
மே
2022
12:05
திருக்கழுக்குன்றம்:ஆனுாரில், அஸ்திரபுரீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் பகுதியில், சவுந்தரநாயகி உடனுறை அஸ்திரபுரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிவபெருமான், அம்பாள் அருள் பாலிக்கின்றனர். யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில் வழிபாடு நடத்தினால், வழக்கு, குடும்ப சிக்கல்கள் தீர்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை, அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தேவராஜன், தலைவராக பொறுப்பு வகிக்கும், ஆனுார் கிராம முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், சமீபத்தில் புனரமைத்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன், கும்பாபிஷேகத்தை நடத்தியது. விசேஷ ஹோமம், நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, காலை 7:20 மணிக்கு, விமானங்கள், மூலவர், உற்சவர், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகத்தை நடத்தியது. அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோவில் புனரமைப்பு அறக்கட்டளை நிர்வாகி தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனுார், பொன்விளைந்தகளத்துார், வல்லிபுரம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்தனர். இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின், பஞ்சமூர்த்திகள் வீதியுலா சென்றனர்.