நத்தம் : நத்தம் அருகே உள்ள வேலாயுதம்பட்டி காளியம்மன், முத்தாலம்மன், அய்யனார் மற்றும் வள்ளடியார் உள்ளிட்ட தெய்வங்களின் புறவி எடுப்பு திருவிழா நடந்தது.
விழாவில் முன்னதாக ஏப்ரல்-26 சாமிக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், காளியம்மன் சாமி அலங்காரம் செய்து எழுந்தருளல், தோரண மரம் ஊண்டுதல், அய்யனார் சாமி, வள்ளடியார் சாமி எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மாலை தொடர்ந்து மேளதாளம் முழங்க வானவேடிக்கை மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் அய்யனார் சாமி, வள்ளடியார் சாமி பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு முத்தாலம்மன் சாமி மின் சப்பரத்தில் வாணவேடிக்கையுடன் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று அக்னிச்சட்டி எடுத்தும், கிடாய் விடியும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் நிறைவாக பக்தர்கள் ஆரவாரத்துடன் முத்தாலம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.