பதிவு செய்த நாள்
20
மே
2022
10:05
தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டை, ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, தண்டையார்பேட்டையில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, 13ம் தேதி, கொடியேற்றத்துடன், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில், உற்சவர், சந்திர பிரபை, தொட்டி உற்சவம், கருடசேவை, யாளி வாகனம், சூரிய பிரபை, நாக வாகனம், பல்லக்கு, அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம், நேற்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் வரதராஜப் பெருமாள் உடனுறை பெருந்தேவி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதியில் உலா வந்தனர்.அப்போது கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா என, விண்ணதிர முழங்கி, பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர். மாலையில், விமான தேர் உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து, இன்று அம்ச வாகனம், குதிரை வாகனம், நாளை தீர்த்தவாரி, மாலை கொடியிறக்கம், புஷ்ப பல்லக்கு, 22ம் தேதி, மங்கள கிரி, 23ம் தேதி விடையாற்றி எனும் உற்சவர் திருமஞ்சனம் ஒய்யாளி சேவையுடன், திருவிழா நிறைவு பெறும்.