சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள் : யுடியூபரை கண்டித்து போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 04:05
சிதம்பரம்: நடராஜப்பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக தமிழகம், புதுச்சேரியில் ஆன்மீக பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து சிவனடியார்கள் ஒன்றிணைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று (மே 23) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்கின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் ஏராளமாக வந்துள்ள சிவனடியார்கள் 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் தங்கியுள்ளனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடராஜர் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.