பதிவு செய்த நாள்
24
மே
2022
05:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் மிகவும் பழமையான கோயிலான சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 1984 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கடந்த, 38 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோவில் தலைமை கோவிலாகவும், வனபத்ரகாளியம்மன் கோவில், நகரிலுள்ள பிற கோவில்கள், இதன் உப கோயில்களாக இருந்தன. மேட்டுப்பாளையம் தாலுகா, குன்னூர், கோத்தகிரி ஆகிய ஊர்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று, முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.
காலப்போக்கில் இக்கோவிலை பராமரிக்காததால் சுவர்கள் சிதிலம் அடைந்தன. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது. இந்நிலையில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தும்படி, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, 2015ம் ஆண்டு இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கின. கடந்த, 7 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்யப்பட்டு வந்தன. மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம் என பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இரு பக்கம் சிவன், அம்பாள் சன்னதிகளும், முன்புறம் தியான மண்டபம், நவகிரக சன்னதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களில் உள்ள மூலவர் சுவாமி சிலைகள் போன்று, சோபன மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம், நுழைவாயில் கோபுரம் என அனைத்து திருப்பணிகளும் செய்துமுடித்து, கோபுரத்திற்கும், சிலைகளுக்கும் வர்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளன. திருப்பணிகள் முடிந்து, 6 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடை பெறாமல் உள்ளது. பழமை வாய்ந்த சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம், எப்போது நடைபெறும் என மேட்டுப்பாளையம் நகர முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, அனைத்து திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்பு, கும்பாபிஷேகம் தேதி முடிவு செய்யப்படும், என்றனர்.