அன்னூர்: வள்ளலார் வழியில் அன்னூரில் மூலிகை கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உரைத்த வள்ளலார் சத்திய தரும சாலையை 1867 ம் ஆண்டு மே 25ம் தேதி நிறுவினார். பசிப்பிணி போக்குவதே மாபெரும் தர்மம் என்று போதித்தார். கடலூரில் வள்ளலார் நிறுவிய தருமச்சாலையில் 155 ஆண்டுகளாக மூன்று வேளையும் அன்னதானம் செய்யப்படுகிறது. அந்த வழியில் அன்னூரில் சன்மார்க்க சங்கத்தினர் கடந்த ஓராண்டாக அன்னூரில் மூலிகை கஞ்சி தினமும் 100 பேருக்கு வழங்கி வருகின்றனர். வள்ளலார் நிறுவிய சத்திய தரும சாலையின் 156 வது துவக்க விழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு 200 பேருக்கு மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது. மதியம் அரசு மருத்துவமனை முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சன்மார்க்க சங்கத்தினர் கூறுகையில், அரிசியை அரைத்து, அதனுடன் வல்லாரைக் கீரை, முருங்கைக்கீரை, வெற்றிலை, இஞ்சி, குறுமிளகு ஆகியவற்றை சேர்த்து மூலிகை கஞ்சி தயாரிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக மன்னீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் முன்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் வாரத்தில் ஒருநாள் அரசு மருத்துவமனை முன்பு அன்னதானம் செய்யப்படுகிறது என்றனர்.