பெரியகுளம்: நூற்றாண்டு பழமையான ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலைச் சுற்றி கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் வடகரையில் ஹிந்து அறநிலையத்துறை மலைமேல் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு உட்பட்ட தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயில் நூற்றாண்டு பழமையானது.
பிரதோஷம், கார்த்திகை, சோமவாரம், பவுர்ணமி, நவராத்திரி உட்பட கோயிலில் பல்வேறு விசேஷங்கள் நடந்து வருகிறது. தினமும் பூஜைகள் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த கோயிலை சுற்றி மில்லர் ரோட்டில் சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் பல நாட்களாக தேங்கிக் கிடக்கிறது. ஈரத்தன்மை யால் கோயில் சுற்றுப்புறச் சுவரில் விரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்குள் கழிவுநீர் செல்கிறது. ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.