காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின், மூன்றாம் நாளான நேற்று காலை, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரத்தில் வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் தரை தளத்தில் பெருமாள் அமர்ந்த கோலம், மேல் தளத்தில் சயன கோலம், அதற்கு மேல் தளத்தில் நின்ற கோலம் என, மூன்று கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த கோவில் பிரம்மோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு வாகன மண்டபத்தில் அலங்காரம் நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி கோபுர தரிசனம் நடைபெற்றது.பின், ராஜவீதிகளில் பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் அனுமந்த வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.