பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
08:06
அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள்; அவை, கோவிலுக்கு செல்வதில்லை; உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது... என, ஒரு ஆதீனம் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் இதை ஆமோதிக்கின்றனர். உண்மை நிலை என்ன என்பதை சற்றே ஆராய்வோம்.கடந்த மூன்றாண்டுகளாக சென்னை வடபழநி கோவிலின் தக்கார் பொறுப்பை வகித்து வருவதால், அங்கு நடக்கும் பல விஷயங்களை நான் நன்கறிவேன். தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் என்ற முறையிலும் நானறிந்த விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
ஹிந்து கோவில்களை நிர்வகிக்க அறநிலையத் துறை தேவையா, மற்ற மதங்களில் இருப்பது போன்றே ஹிந்து கோவில்களும் இருக்க வேண்டுமா என்பது, மாபெரும் விவாதத்துக்குரியது. கோவில்கள், மடங்கள், ஆதீனங்கள், பரம்பரை குருக்கள், ஹிந்து அமைப்புகள் என, அனைவரும் ஒன்றுகூடி ஆராய வேண்டிய விவகாரம் இது.அந்த விவாதத்துக்கு முடிவு காணும் வரை தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும், 1959ம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 22/1959) படியே நாம் செயல்பட இயலும்.
கடும் நடைமுறைகள்: கோவில் உண்டியல் பணத்தை கையாள்வதற்கான நடைமுறைகள் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்து சமய அறநிலையத் துறையைநிர்வகித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாலும், பல உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களாலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன; சிலர் கூறுவதைப் போன்று, உண்டியல் பணம் வேறு எங்கும் போவதற்கில்லை.தனியார் துறை நிர்வாகங்களைக்காட்டிலும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோவில் நிர்வாகங்களில் பண வரவு - செலவுக்கான சட்ட நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. வெளியில் இருப்போர் அறியாது விமர்சிப்பதுபோல, இங்கு அவ்வளவு எளிதாக முறைகேடு நடந்துவிட முடியாது; கோவில் நிர்வாகத்தில் இருந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.கோவில்களுக்கான சட்ட நடைமுறைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்களுக்கான பல நற்பணிகள் தாமதமாகிறது என்று சொல்லலாமே தவிர, கோவில் வருமானம் வேறு எங்கோ போகுமளவிற்கு சட்டத்தில் ஓட்டை இல்லை.
100 சதவீத பாதுகாப்பு : கோவில்களின் அந்தஸ்து, வருமானத்துக்கு ஏற்ப வகை பிரிக்கப்பட்டு செயல் அலுவலர், உதவிக் கமிஷனர், துணைக் கமிஷனர், இணைக் கமிஷனர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பக்தர்கள், கோவில் உண்டியல்களில் போடும் காணிக்கைகள் எந்தளவிற்கு பாதுகாப்பாக கையாளப்படுகின்றன என்பதை, கீழ்கண்ட நடைமுறைகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
*முதலில், காணிக்கை எண்ணும் தேதி முடிவு செய்யப்படும். அந்த நாளில் எண்ணுவதற்கு உத்தரவு கேட்டு இணை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்படும்
* செயல் அலுவலர் / உதவிக் கமிஷனர் மற்றும் ஒரு ஆய்வாளரை நியமித்து காணிக்கை எண்ண அனுமதிக்கப்படும்
* இணை ஆணையரின் அனுமதி பெற்றதும், காணிக்கை எண்ணும் தேதி குறிப்பிட்டு பக்தர்களும் பங்கேற்குமாறு, அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடப்படும். உண்டியல் எண்ணும் நாள் பற்றிய தகவல், வங்கிக்கு தெரிவிக்கப்படும்
* ஒவ்வொரு உண்டியலுக்கும் இரண்டு சாவிகள் உண்டு. ஒன்று, தக்காரிடமும், மற்றொன்று செயல் அலுவலர் / உதவிக் கமிஷனர் அல்லது துணைக் கமிஷனரிடமும் இருக்கும்
* உண்டியல் நிறுவும் பொழுதே அதற்கு ஒரு நம்பர் குறிப்பிடப்படும். புதிய உண்டியல் நிறுவினால், உண்டியல் பதிவேட்டில் அதற்கென நம்பர் கொடுத்து பதிவு செய்யப்படும்
* வெளியிலிருந்து வரும் ஆய்வாளர் அல்லது செயல் அலுவலர் அல்லது சரிபார்ப்பு அலுவலர் (Verification Officer) இல்லாமல், எந்த ஓர் உண்டியலையும் திறக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு மாற்றி வைக்கவோ முடியாது
* உண்டியல் எண்ணும் நாளில், பக்தர்கள் / உண்டியல் எண்ணும் தன்னார்வலர்கள் குழு அல்லது இருதரப்பினரும் இணைந்த அன்பர்கள் முழு பரிசோதனை செய்யப்படுபவர். அவர்கள் கொண்டு வரும் சொந்த உடைமைகள் அடங்கிய பைகள் வாங்கி தனியாக வைக்கப்படும்
* ஒவ்வொருவருடைய அலைபேசி எண் மற்றும் ஆதார் எண், ஒரு பதிவேட்டில் குறித்து வைக்கப்படும். குழுவின் அடையாள அட்டை அல்லது கோவில் நிர்வாகம் கொடுக்கும் அடையாள அட்டையை வைத்திருக்கும் நபர் மட்டும் உண்டியல் பணம் எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவர்
* உண்டியல் எண்ணும் இடத்தை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும்
* கோவில் அதிகாரி, தக்கார், ஆய்வாளர் அனைவரும் வந்த பின் தக்காரின் சாவியையும் செயல் அலுவலர்/ உதவிக் கமிஷனரின் சாவியையும் வைத்து, பொதுமக்களின் பார்வையில் படும்படி வெளிப்படையாக ஒவ்வொரு உண்டியலாக திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் பொழுது பக்தர்களும் உடன் இருப்பர்; வீடியோ கேமராமேன்களைக்கொண்டு வீடியோ பதிவு செய்யப்படும். இப்பணி காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரையே நடக்கும்
* உண்டியலில் எடுக்கும் பணத்தை ஒரு பெட்டியில் சேர்த்து, உடனே அதை பூட்டி ஆய்வாளர் துணையுடன் பணம் எண்ணும் இடத்திற்கு எடுத்து செல்லப்படும். ஆய்வாளரிடம் உள்ள சாவியை வைத்து அந்த பெட்டி திறக்கப்பட்டு, பணம் எண்ணும் இடத்தில் கொட்டப்படும்
* பணம் எண்ணி முடிக்க முடிக்க அவை கட்டுப்போடப்பட்டு, அந்த பணம் வங்கி ஊழியர்கள் இருக்கும் இடத்தில் கொடுக்கப்படும். கொடுப்பதற்கு முன் ஒரு பதிவேட்டில், ரூபாய் நோட்டு வகை (Denomination) குறித்துக்கொண்டு கொடுக்கப்படும்
* வங்கி ஊழியர்கள் அதை எண்ணி உறுதி செய்த பின்னர் கோவில் ஊழியரும், வங்கி ஊழியரும் கையொப்பம் இடுவர். அனைத்துப் பணமும் எண்ணிய பின் தக்காரும், கோவில் அதிகாரிகளும் சேர்ந்து நாணயங்களை, மொத்தம் எவ்வளவு என்று எண்ணி சோதனை செய்வர்
* இதற்கிடையில் ஒரு புறம் தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்கள், அத்தொழிலில் கைதேர்ந்த நபரைக்கொண்டு சோதனை செய்து எடை போட்டு, அவையும் ஒரு பதிவேட்டில் பதிந்து வைக்கப்படும்
* இறுதியில் தங்கம், வெள்ளி போன்ற அனைத்து பொருட்களுக்கும் ஒரு அட்டை தயார் செய்து, அதில் எடையைக் குறிப்பிட்டு தக்கார் மற்றும் அனைத்து கோவில் அதிகாரிகளும் அதில் கையொப்பம் இடுவர்.
இறுதியில் அனைத்துப் பணத்தையும் வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்று, கோவில் கணக்கில் வரவு வைத்து கொடுப்பர். தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் அனைத்தும் பத்திரமாக ஆய்வாளர் துணையுடன் கோவில் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்படும்.
தனி வங்கி கணக்கில்... : கோவில்களில் உண்டியல் வைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பக்தர்களின் காணிக்கைகள் பத்திரமாகத்தான் இருக்கின்றன; மிகுந்த முன்னெச்சரிக்கையுடனேயே கையாளப்படுகின்றன. காணிக்கை குறித்த பதிவேடுகள் எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பதிவேடுகளிலும் ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல் தணிக்கைப் பிரிவுக்கும் அனுப்பப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.உண்டியலில் சேகரிக்கப்படும் பணம், தனி வங்கி கணக்கில் இருக்கும். அந்தந்த மாதம் கோவிலுக்கு தேவையான செலவுக்கு, இந்த தனி வங்கி கணக்கில் இருந்து கோவிலுக்கான அன்றாட நடைமுறை வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். உண்டியல் பணத்தை கோவில் அதிகாரி நிரந்தர வைப்பு கணக்கிலேயே வைத்திருப்பார் (உதாரணமாக, வடபழநி ஆண்டவர் திருக்கோவில் உண்டியல் காணிக்கை நிதி தனி வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் இருக்கிறது)
இதேபோன்று, தமிழகத்திலுள்ள சில பெரிய கோவில்களின் வங்கி கணக்கில், பல நுாறு கோடி ரூபாய் வரை நிரந்தர வைப்பு நிதியாக இருப்பதையும் நானறிவேன். இப்பணத்தை யாரும் எடுக்கவோ, வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ முடியாது; விதிகளில் அதற்கு வழியுமில்லை.உண்டியலில் சேகரிக்கப்படும் உலோகங்கள் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு, தங்கம் தனியாக கட்டப்பட்டு கோவில் லாக்கரில் பாதுகாக்கப்படுகின்றன. இவையும் மூன்று அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அதற்கான சாவிகள் வெவ்வேறு அலுவலகங்களில் தனியாக பராமரிக்கப்படுகின்றன. லாக்கரை தனியாகச் சென்று யாரும் திறக்க முடியாது; சாவி பெறுவதற்கே கடும் விதிகளும், நடைமுறைகளும் உள்ளன.இவ்வாறு, அறநிலையத் துறையின் கீழ் வரும் தமிழக கோவில்களின் உண்டியலில் சேகரிக்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் கோவில் லாக்கர்களில் பாதுகாப்பாக உள்ளன; அவற்றின் மொத்த மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். ஒரு பக்தர், குறிப்பிட்ட வேண்டுதலுக்காக, அதாவது, வேல், கிரீடம் செய்ய தங்கமோ, வெள்ளியோ காணிக்கையாக கொடுத்திருந்தால், அவற்றை வேறு காரணங்களுக்காக பயன்படுத்த முடியாது.
அறியாமையன்றி வேறில்லை: உண்டியலில் இறை நம்பிக்கையுடன் காணிக்கையாக செலுத்தப்படும் பணம், கோவில் பணிக்கும், பயன்மிகு காரியங்களுக்கும் உபயோகமாகவேண்டுமென பக்தர்கள் கருதுகின்றனர். பக்தர்களில் சிலர், வேண்டுதல் நிறைவேற்ற தாங்கள் அணிந்திருக்கும் தங்க மோதிரம், செயின்கள் உள்ளிட்ட ஆபரணங்களை கழற்றி உண்டியலில் இடுகின்றனர்.பணத்தை எவ்வாறு வங்கியில் டிபாசிட் செய்து கோவில் தேவைக்கு நடைமுறைப்படுத்துகிறோமோ, அதேபோல், ஒரு வேண்டுதல்களுக்காக உண்டியலில் செலுத்தப்படும் தங்கம் உள்ளிட்ட உலோகங்களை எடுத்து பயன்படுத்தலாம் என்றாலும், ஹிந்து சமய அறநிலையத் துறை இதுவரை அவ்வாறு பயன்படுத்தியதில்லை. அதனால், இந்நகைகளும் லாக்கர்களில் அப்படியே உள்ளன.
இத்தங்கத்தையும் யாரும் தனி ஆளாக கையாள முடியாது. மூன்று அதிகாரிகள் முன் லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டு, அதற்கான சாவிகள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் வெவ்வேறு அலுவலகத்தில் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும். ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ சேர்ந்து தனிப்பட்ட முறையில் லாக்கரை திறக்க முடியாது; சாவியையும் பெற்றுவிட முடியாது.உண்மை நிலை இவ்வாறிருக்க, ஒரு சிலர் அவரவர் கற்பனைச் சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல் காணிக்கைகள் இந்த அமைச்சருக்கு, 10 சதவீதம் போகிறது; அந்த அமைச்சருக்கு, 10 சதவீதம் போகிறது என சொல்வது, அவர்களின்அறியாமையன்றி வேறில்லை! பக்தர்களுக்கு வேண்டுகோள்ஒரு சிலர் கூறுவதைப்போன்று கோவில் உண்டியல் பணம் வேறு எங்கும் போய்விடாது. இந்து கோவில்களில் கலாசாரம், விழாக்கள், கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடக்க வேண்டுமெனில், கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளை அவசியம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
செயல்பாட்டில் சிறப்பு!: கடந்த நான்கு ஆட்சிகளிலும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளைக் கவனித்து வரும் காரணத்தால், என்னால் ஒன்றை உறுதியாக கூற முடியும். அமைச்சராக சேகர்பாபு, கமிஷனராக குமரகுருபரன், துறை செயலராக சந்திரமோகன் வந்த பின், ஹிந்து சமய அறநிலையத் துறை புது உத்வேகம் பெற்றுள்ளது. இதற்குமுன், கோவில்களுக்கு நல்ல வருவாய் இருந்தும் கோவில்கள், குருக்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பக்தர்களுக்காக பெரிய அளவில் ஏதும் மாற்றங்கள் நிகழவில்லை; திட்டங்களும் தீட்டப்படவில்லை. வழக்கமான திருப்பணிகளும், விழாக்களும் மட்டுமே நடந்து வந்தன. ஆனால், அமைச்சராக சேகர்பாபு வந்தபின், இத்துறை புத்துணர்வு பெற்றுள்ளதை மறுக்க இயலாது. வாரத்துக்கு குறைந்தது ஏழு முதல் 10 கோவில்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார். அப்போதே, அங்குள்ள விவகாரங்களுக்கு அதிகாரிகளுடன் பேசி, தீர்வும் காண்கிறார். வாரத்தில் மூன்று நாட்கள் நள்ளிரவு வரையும் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த, 20 ஆண்டுகளாக துாங்கிக்கொண்டிருந்த கோப்புகள் தற்போது தான் துாசு தட்டப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளன. காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில்களுக்குச் சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. பல கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவரது வேகத்துக்கு ஈடு கொடுத்து பணியாற்றும் கமிஷனர் குமரகுருபரன், இதுவரை நடைமுறையில் இருந்த சிவப்பு நாடா நடைமுறைக்கு விடுதலை கொடுத்து, கூடுதல் கமிஷனர், இணைக் கமிஷனர், துணைக் கமிஷனர், உதவிக் கமிஷனர் அளவில் முடிவெடுத்திடவும் அனுமதித்துள்ளார்.இதனால், பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த பணிகள், சில வாரங்களிலேயே வேகமெடுத்து முடிவுறும் நிலையில் உள்ளன. இதை துறையின் உள்ளே இருந்து நேரில் பார்த்தவர் என்ற அனுபவத்தில் இதை குறிப்பிடுகிறேன்.அமைச்சர் சேகர்பாபு மீது குற்றம் சொல்பவர்கள், அரசியல் ரீதியாக வேண்டுமானால் சொல்லலாமே தவிர, துறை சார்ந்து எதுவும் குறை கூற முடியாது. இத்துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுமாறு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவ்வாறே தான் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு அடிக்கடி சொல்வது உண்டு. அதன்படியே அவர் செயல்பட்டும் வருகிறார். அவர் கோவில்களில் செய்துள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு உண்மை அறிந்து கொண்டவர்கள், குறை சொல்லமாட்டார்கள் என கருதுகிறேன்.
இல.ஆதிமூலம் : வெளியீட்டாளர், தினமலர் கோவை.