பதிவு செய்த நாள்
04
ஆக
2022
01:08
கம்பம்: மகாத்மா காந்திக்கு கோயில் கண்ட ஊர் என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அறை கிராமம் பெற்றுள்ளது.
சுற்றிலும் திராட்சை தோட்டங்களும், வாழை தோட்டங்களும் சூழ்ந்துள்ள இந்த கிராமம கம்பத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில், சுருளி அருவிக்கு செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மையப்பகுதியில் காந்திக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. சக்திவேல் கவுண்டர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியராஜ் ஆகியோரின் முயற்சியில் இந்த கோயில் 1985 ல் மறைத்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கோயிலின் உட்புறம் நடுநாயகமாக நின்ற நிலையில் மகாத்மாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் சுவர்களில் இந்த கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள், திறப்பு விழா படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் காந்தி நினைவு நாளில் பொங்கல் வைத்து காந்தி படத்தை ஏந்தி ஊர்வலம் நடைபெறும். அதேபோல் சுதத்திர தினம், குடியரசு தின நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த கிராமத்தை சேர்ந்த பரமசிவத் தேவர், முன்னாள் எம்.பி. சக்திவேல்கவுண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியராஜ், கிருஷ்ணசாமி கவுண்டர், பழனிவேல் கவுண்டர், ஈசப்ப கவுண்டர், சாமாண்டி ஆசாரி, ராமசாமி கவுண்டர், குந்திலி ராமசாமி நாயக்கர், கிருஷ்ணசாமி கவுண்டர், வீராச்சாமி நாயுடு, சுருளியாண்டி ஆசாரி, சுப்ரமணியபிள்ளை, சுப்புசாமி கவுண்டர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த ஊராகும். இப்பகுதியில் சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கேற்றவர்கள் வாழ்ந்த கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது இந்த ஆலயம் மறைந்த முன்னாள் எம்.பி. சக்திவேல்கவுண்டரின் பேரன் ராஜா நிர்வகித்து வருகிறார். அவர் கூறுகையில், " சுதந்திர போராட்டத்தில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். அவர்களின் நினைவை போற்றும் வகையில் தான் இந்த ஆலயம் எனது தாத்தா மற்றும் மறுத்த பெரியவர் பாண்டியராஜ் ஆகியோரால் கட்டப்பட்டது. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் உள்ளது. மறைந்தாலும் அந்த தியாகிகளின் நினைவுகளுடன் இன்றைக்கும் எங்கள் கிராமம் தேசப்பற்றுடன் இருக்கும்" என்றார்.