பதிவு செய்த நாள்
12
ஆக
2022
02:08
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் இன்று(12ம் தேதி) காலை பாலாலய யாகசாலை பூஜைகளுடன் நடந்தது.
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லுாரில் புற்று மண்ணால் உருவான மாரியம்மனுக்கு, மராட்டிய மன்னர்கள் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆவணிப் பெருந்திருவிழா கொண்டாடப்படும். இந்நிலையில் இக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடத்திட கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை பாலாலயத்துக்கான பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று(12ம் தேதி) காலை பாலாலய யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் கவிதா,கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள், மண்டபங்கள், தரை தளம் புனரமைக்கும் பணி துவங்கியது.