பதிவு செய்த நாள்
30
ஆக
2022
08:08
நாடு முழுதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், விநாயகர் சதுர்த்தி விழா களை கட்ட வில்லை. தனி நபர்கள் தங்களின் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. ஹிந்து அமைப்பினர், தங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இரு தினங்களுக்கு முன், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அன்பு ஆகியோர், வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கும் போது, 24 மணி நேரமும் பாதுகாப்பு அவசியம். சிலைகளுக்கான பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் ஆலோசித்து வருகின்றனர்.
கூட்டத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:சிலைகளை எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் வைக்கக்கூடாது. கீற்று கொட்டகையில் சிலைகளை வைக்கக்கூடாது. இரும்பு தகடு வாயிலாக கூரை அமைக்க வேண்டும். மின் இணைப்பு சரியாக தரப்பட்டுள்ளதா என்பதை விழா குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இணைப்பு தரப்பட்டுள்ள இடத்தில், குழந்தைகள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இரவு நேரத்தில் வெளிச்சம் நன்றாக தெரியும்படி விளக்குகள் அமைக்க வேண்டும். சிசிடிவி கேமரா இருக்கும் இடங்களில் சிலைகள் இருப்பது நல்லது.சிலைகள் இருக்கும் இடத்தில், தீ தடுப்பு சாதனங்கள் இருக்க வேண்டும்.
வாளியில் மணல் இருக்க வேண்டும். சிலைகளுக்கு அருகே, வெடி வெடிக்கக்கூடாது. தங்கள் காவல் நிலைய எல்லையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளுக்கான பாதுகாப்பை, உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பல முறை வந்து ரோந்து போலீசார் கண்காணிப்பர். போலீசாருடன், விழா குழுவினர் சிலைகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் கைகோர்க்க வேண்டும். சுழற்சி முறையில், ஆட்களை நியமித்து, அந்த இடத்தில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிலைகளுக்கு அருகில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை விழா குழுவினர் கண்காணிக்க வேண்டும்.ஊர்வலம் மிகவும் அமைதியாக செல்ல வேண்டும். மாற்று மதத்தினர் மனம் புண்படும்படியான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
விநாயகர் சதுர்த்திக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பணி இடம் ஒதுக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அந்த போலீஸ் அதிகாரி தான் பொறுப்பு. சந்தை மற்றும் வணிக பகுதிகளில் கூட்ட நெரிசலை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் இன்னமும் உள்ளது. இதனால், பொது மக்கள், பொருட்கள் வாங்கச் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை கண்காணிக்கவும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
பூக்கள் விலை விர்ர்ர்...! : கோயம்பேடு பூ சந்தையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கூடுதலாக 50 வாகனங்களில் பூக்கள் வரத்து உள்ளது. இருந்தும் மழையின் காரணமாக, பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று நிலவரப்படி, 1 கிலோ மல்லி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. கனகாம்பரம் 900 ரூபாய்க்கும், முல்லை 450க்கும், ஜாதி மல்லி 300க்கும், அரளி பூ 250க்கும், சம்பங்கி 240க்கும், பன்னீர் ரோஸ் 80க்கும், சாமந்தி 160க்கும், சாக்லேட் ரோஸ் 160க்கும் விற்பனை செய்யப்பட்டது.