கோழிகுத்தி 14 அடி உயர வானமுட்டி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2022 10:09
மயிலாடுதுறை: கோழிகுத்தியில் அமைந்துள்ள 14 அடி உயர ஒரே அத்தி மரத்தாலான வானமுட்டி பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த கோவிலில் பிப்பல மகரிஷிக்கு பெருமாள் விஸ்வரூப காட்சி கொடுத்த தலமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த கோவிலில் பெருமாளை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோடிஹத்தி என்ற பெயர் பிற்காலத்தில் மருவி கோழி குத்தி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வானமுட்டி பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி இசையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசங்களை அடைந்தது. அங்கு பட்டாச்சாரியார்கள் புனித நீரை ராஜகோபுரம் மற்றும் பெருமாள், தாயார் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் ஊற்றி சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து வைக்கப்பட்டது. உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர், சென்னை மகாலட்சுமி, தொழிலதிபர்கள் டெக்கான் மூர்த்தி, விஜயகுமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷமிட்டபடி கும்பாபிஷேகத்தை கண்டு, பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி தலைமையிலானூர் செய்திருந்தனர். மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த ராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.