பதிவு செய்த நாள்
12
செப்
2022
09:09
திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலையடி வாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் புனித நீராடிய பின், மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இக்குளத்தில் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடைபெறும். இந்நிலையில், திருக்குளம் துார் வாரவும், படிகள் சீரமைக்கவும் கோவில் நிர்வாகம் தீர்மானித்து, கோவில் நிதியின் வாயிலாக, 22.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.தற்போது குளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக குளத்தில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றும் பணிகள் முடிந்தன. குளத்தின் படிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சரவணப்பொய்கை குளம், ஒன்றரை ஏக்கர் பரப்பில் உள்ளது. குளத்தின் நான்கு பக்கங்களும், 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில், 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.தற்போது குளம் சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், குளத்தில் உள்ள இரண்டு கிணறுகளையும் துாய்மைப்படுத்தி, இரும்பு கம்பிகளால் மூடப்பட உள்ளன. மேலும், நீராழி மண்டபம் மற்றும் குளத்தின் சுற்றுச்சுவர் ஆகிய பகுதி களில், வண்ணம் தீட்டப்படும். இப்பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.