பதிவு செய்த நாள்
12
செப்
2022
09:09
பாலக்காடு: கேரளா மாநிலம் திருச்சூரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலிக்களி நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் கலாச்சார தலைநகரான திருச்சூரில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், புலிக்களி (புலி விளையாட்டு) நடனம் நடந்தது. உடல் முழுவதும், புலியைப்போல, தத்தரூபமாக வர்ணம் தீட்டி, முகமூடி அணிந்து, முழங்கும் செண்டை மேளதாளத்திற்கு இணங்க இடுப்பில் அணிந்த சிலங்கையும் தொப்பையும் குலிக்கி 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நேற்று திருச்சூர் நகரை வலம் வந்தனர். மாலை 4.00 மணி முதல் இரவு வரை இந்த கொண்டாட்டம் நீடித்தது. திருச்சூர் சுற்றியுள்ள, பூங்குன்னம், விய்யூர், சக்தன், கானாட்டுக்கரை, அய்யந்தோள் ஆகிய பகுதிகளில் இருந்துள்ள குழுவுக்கு, 41 முதல் 51 கலைஞர்கள் வீதம், புலி வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர். நடுவிலால் கணபதியை வணங்கி தேங்காய் உடைத்து ஆரம்பித்த புலிக்களியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரசித்து மகிழ்ந்தனர். எலிசபத் இளவரசி மரணத்தில் நாடு இரங்கல் தெரிவிக்கும் தினமானதால் அமைச்சர்கள் யார் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.