காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெருவில், ஆண்டுதோறும் சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஆடி திருவிழா நான்கு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி 40ம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் 11ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 8 ல் துவங்கியது. அன்று மாலை 4:30 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி அம்மன் வீதியுலா நடந்தது.இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 9ல் இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியலா நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 10ல், இரவு 7:00 மணிக்கு அம்மன் ஊஞ்சல் சேவை உற்சவமும், லட்சதீப வழிபாடும் நடந்தது.மூன்றாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு வர்ணித்து கும்பம் படையலிடப்பட்டது.விழாவின் நிறைவு நாளான நேற்று காலை அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு சீர்கஞ்சி வார்க்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை சின்ன காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு, ஏரிக்கரை இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.சின்ன காஞ்சிபுரம் நேதாஜி நகரில் வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில் இருந்து அம்மன் கரகம் புறப்பட்டு வீதியுலா நடந்தது.மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். இரவு 10:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.