முக்கிய விழாவான கொடை விழா அன்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், வில்லிசை, மதியம் அம்பாளுக்கு மகாஅபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, தொடர்ந்து அம்பாள் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு ரகாட்டம் மற்றும் அம்மனுக்கு இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து மேளவாத்தியங்களுடன் அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல், தொடர்ந்து அம்பாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சகல மேளவாத்தியங்களுடன் கரகாட்டம் வாணவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி உலா செல்லுதல், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சென்னை வாழ் சங்கத்தினர் கோவை, மும்பை வாழ் உறவின் முறையினர் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறையினர், பஜார் வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கொடை விழா நிகழ்ச்சியில் காலை, மதியம் அம்பாள் தீபாராதனை, இரவு சென்னைவாழ் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை நாடார் சங்கம் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரி, இன்று (15ம் தேதி) இரவு மும்பைவாழ் சங்கத்தின் சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, நாளை கே.சின்னத்துரை அன்கோ, வரகயிலமணி நாடார் சன்ஸ், ராமகிருஷ்ண நாடார் சன்ஸ், நவமணி ரெடிமேட் சார்பில் மங்கையர்கரசியின் சொற்பொழிவு, 17ம் தேதி கோவைவாழ் உறவின்முறையின் சார்பில் மேஜிக் & கலக்கல் கதம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ம் தேதி இரவு உபயதாரர்கள் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரியுடன் இந்த ஆண்டு கொடைவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.