திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹாளய அமாவாசையை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மஹாளய அமாவாசை தினமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து மாத பிறப்பு மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், வெளியூர் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரரை தரிசித்து, கிரிவலம் சென்றனர். அய்யங்குளம், சர்க்கரைகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மூதாதையருக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.