பதிவு செய்த நாள்
31
அக்
2022
02:10
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.
நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான திருமலைக்கேணி சுப்ரமணியசாமி கோவிலில் கடந்த அக்.25 கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து முருகப்பெருமான் சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்காட்சி, அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளால் என கோவிலில் தினசரி அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் அன்னை ஆதிபராசக்தியிடம் முருகப்பெருமான் சூரசம்காரம் செய்ய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 16 வகையான மூலிகை அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது.
மாலை உற்சவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிரிவலப் பாதையில் வலம் வந்து கஜமுகாசுரன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சூரபத்திரனை சுப்பிரமணிய சுவாமி வேல் கொண்டு அளிக்கும் சூரசம்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று முடிந்து மேளதாளம் மற்றும் அதிர்வெட்டுகள் முழங்க கோவிலுக்குள் சென்றார். சூரசம்ஹார விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளிட்ட திண்டுக்கல், செந்துறை, நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் நடந்த கந்த சஷ்டி விழா பாலபிஷேக பூஜையில் மாவட்ட கவுன்சிலர் விஜயன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறக்காவலர் அழகு லிங்கம், செயல் அலுவலர் சுகன்யா மற்றும் சதாசிவ சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.