பதிவு செய்த நாள்
03
நவ
2022
11:11
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் பழமையான உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டியின் சிற்பம் அழகான திலகம் இட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அக்கிரமேசி ராமர் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், வழி மறிச்சான் சிவா, சக்தி முருகன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது: வழிமறிச்சானில் உயர் குடி மூதாட்டியின் நடுக்கல், கிழவி அம்மன் என வழிபட்டு வருகின்றனர். பொதுவாக நடுக்கல் வீர தீர செயல்கள் செய்த வீரர்கள், விலங்குகளின் சண்டையிடும் காட்சி என இருப்பது வழக்கம். ஆனால் இச் சிற்பம் இரண்டரை அடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கைகளிலும் காப்பு, வளையல்கள், கழுத்தில் ருத்ராட்ச மாலை, ஆபரணங்கள் நீண்ட காதுகள் தெளிவாக உள்ளது. இடையில் இடைக்கச்சை அணிந்தபடி, இரு கால்களிலும் கழலைகள் சிற்பம் நேர்த்தியாக உள்ளது. மேலும் இடது கையில் ஊன்றுகோல் தடி மற்றும் நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. இதனால் உயர் வகை ஆபரணங்களை கொண்டுள்ளதால், உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மதிக்கத்தக்க பெண்மணியாக இருந்திருக்கலாம் என, தெரிகிறது. தற்போது இந்த நடுகல்லை பாட்டி கிளவி அம்மன் என்ற பெயரில் பகுதி மக்கள் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர், என்றனர்.