மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2022 07:11
சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்க உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் சபரிமலை பக்தர்களை வரவேற்க தயாராகியுள்ளது.
மண்டலகால பூஜைகளுக்காக இன்று மாலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின்னர் புதிய மேல்சாந்திகளான சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன்நம்பூதிரி ஆகியோருக்கு அபிேஷகம் நடத்தி அவர்களை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிச., 27–ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை பாதைகளில் 13 இடங்களில் செயல்படும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து சன்னிதானம் வரலாம். திருவனந்தபரம் ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் ஸ்பாட் புக்கிங் வசதியை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தொடங்கி வைத்தார். நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் முழுமையான சீசன் என்பதால் அரசும், தேவசம்போர்டும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மாஸ்டா் பிளானில் 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஐந்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மழை மற்றும் வெயிலில் பக்தர்கள் நிற்பதற்கும், தங்குவதற்கும் தற்காலிக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பம்பை முதல் சரங்குத்தி வரையிலான பாதையில் கருங்கற்கள் வேயும்பணி 15 கோடி ரூபாய்செலவில் நடைபெற்று வருகிறது. இந்த தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையிலும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. இன்று மாலை முதல் சபரிமலை சன்னிதானம் சரணகோஷங்களில் மூழ்கும்.