சபரிமலை: சபரிமலையில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நேற்று அதிகாலை நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கியது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து ஸ்ரீகோயிலில் விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார், பின்னர் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதிேஹாமம் நடத்தினார். 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெற்றது.
பகல் 12:00 மணிக்கு களாபாபிஷேகம் நடைபெற்ற பின்னர் உச்சபூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 10:00 மணிக்கு அத்தாழபூஜையும் நடைபெற்றது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி வரும் 40 நாட்களிலும் இதுபோன்ற பூஜைகள் நடைபெற்று 27–ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். நேற்று அதிகாலை நடைதிறந்த போது 18–ம் படியேற நீண்ட கியூ காணப்பட்டது. அதிகாலை 3.35 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் வசதியாக அபிஷேகம் செய்து மலை இறங்கினர். பக்தர்கள் வசதிக்காக சன்னிதானத்தில் இரண்டு இடங்களில் இ காணிக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் அலைபேசியில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் காணிக்கையாக செலுத்தலாம். இதனை தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.