சபரிமலை நடை திறந்தது.. மேல்சாந்திகள் பொறுப்பேற்பு: மண்டலகாலம் இன்று தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2022 08:11
சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. படியேறி வந்த புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். இன்று அதிகாலை 4:00 மணிக்கு மண்டலகாலம் தொடங்குகிறது. கார்த்திகை ஒனறாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டலகாலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மண்டல காலத்துக்காக மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்தனர். பின்னர் 18–ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் 18 படிகளுக்கு கீழே நின்று கொண்டிருந்த புதிய மேல்சாந்திகள் சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் மேல்சாந்தி ஹரிகரன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து வந்து ஸ்ரீகோயிலின் முன்னர் அவர்களுக்கு திருநீறு வழங்கினார். மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீகோயில் முன்பு புதிய மேல்சாந்தி ஜெயராமன்நம்பூதிரிக்கு அபிேஷகம் நடத்திய பின்னர் ஐயப்பன் மூலமந்திரத்தை சொல்லி கொடுத்த பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் ஹரிகரன்நம்பூதிரிக்கு அபிேஷகம் நடத்திய பின்னர் கோயிலுக்குள் அழைத்து சென்றார். இன்று அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன்நம்பூதிரி நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் ஆரம்பமாகும். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிேஷகம் நடத்திய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். நாளை முதல் தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 11:30 வரை நெய்யபிேஷகம் நடைபெறும்.
இந்த சீசனில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக நேற்று 1300 போலீசார் பொறுப்பேற்றனர். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போலீசாரும், மத்திய அதிவிரைவுப்படையினர், தேசிய பேரழிவு நிவாரண படையினரும் பணியில ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லலாம். ஜன.,19 வரை எல்லா தேதிகளிலும் பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கான ‘ஸ்லாட்’ மீதமுள்ளது. பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும் படி தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் நிலக்கல் உள்ளிட்ட 13 ஸ்பாட் புக்கிங் சென்டரில் பதிவு செய்து வரலாம். இதற்கு ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். முக்கிய வழிபாட்டு பிரசாதமான அப்பம், அரவணை 18–ம் படிக்கு வலதுபக்கம் உள்ள கவுண்டர்களிலும், மாளிகைப்புறம் கோயில் இடது புறம் உள்ள கவுண்டர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.அரவணை ஒரு டின் 100 ரூபாய். அப்பம் ஒரு பாக்கெட் அப்பம் 45 ரூபாய். ஆன்லைனில் பிரசாதம் புக்கிங் செய்தவர்களுக்கு தனி கவுண்டர் செயல்படுகிறது. நேற்று மதியம் முதல் பம்பையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இவர்கள் பகல் 12:00 மணிக்கு பின்னர் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. மாலை 6:00 மணிக்கு நல்ல மழை பெய்ததால் தரிசனத்துக்காக காத்து நின்ற பக்தர்களும், மலையேறும் பக்தர்களும் சிரமப்பட்டனர்.