பதிவு செய்த நாள்
30
நவ
2022
02:11
சேலம்: சேலத்தில் உள்ள பழமையான சிவன் சன்னதி பராமரிப்பின்றி சிதைந்து போகும் ஆபத்து உள்ளதோடு, அதன் வரலாறு அழிந்து போகும் அபாயமும் உள்ளதால் உடனே சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம், நெத்திமேடு, கரியபெருமாள் கோவில் கரடு வடக்கு புறம் – திருமணிமுத்தாறு இடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தை ஒட்டி பழமையான, ‘அம்சார் அம்மன்’ கோவில் உள்ளது. இங்கு திரிபுரமுடைய நாயனார்(சிவன்), நிசும்பசூதனி, வடபத்ரகாளி, அம்சார் அம்மன், சண்டேச நாயனார், சண்டேஸ்வரர், பைரவர், ஸ்தேத்திரபாலர் சிலைகள் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் பட்டம் சூட்டி, 15ம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட பின், கரூரை தலைநகரமாக வைத்து, சேலம் உள்ளிட்ட கொங்கு பகுதியை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போதைய சேலம் நாட்டை சேர்ந்த மும்முடி சோழபுரத்தில் உள்ள வியாபாரிகளால் இக்கோவில் கட்டப்பட்டது என்பன உள்ளிட்ட தகவல்கள், அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் புலப்படுவதாக, வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து, அன்னதானப்பட்டி, கரியபெருமாள் கோவில் கரடு பக்தர்கள் கூறியதாவது: அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு முன், அம்சார் அம்மன் கோவிலுக்கு வந்து பூஜை செய்வது இன்றும் தொடர்கிறது. அந்த மாரியம்மன் கோவில் கல்வெட்டில் அம்சார் அம்மன் கோவில் இணை கோவிலாக உள்ள தகவல் இடம்பெற்றுள்ளது. பெருமாள் கரடு கோவில் பகுதியில் உள்ள காளி கோவில் பண்டிகைக்கு முன்பும், இந்த கோவிலில் வழிபடுவது வழக்கம். ஆனால், வெட்டவெளியில் உள்ள பழமையான சிவன், பைரவர், சண்டேச நாயனார், காளிதேவி சிலைகள் உள்ளிட்டவை, அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு கூட தெரியாத நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கல்வெட்டில் உள்ள எழுத்துகள் சிதைந்து, அதன் வரலாறு அழிந்து போகும் அபாயம் உள்ளது. சிலர் மட்டும், பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாளில் வந்து விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். அத்திபூத்தாற்போல் சிவனடியார்களும் வந்து வழிபடுகின்றனர். அதனால், சிவன் சன்னதியை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையெனில் கோவில் சிதைந்து விடும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.