எல்லாம் தாமே என்பதை ஈஸ்வரன் அறிந்திருக்கிறார். ஆனாலும், அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போல பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீநீலகண்ட தீட்சிதரின் சிவலீலார்ணவத்தில் ஓர் அழகான ஸ்லோகம் உண்டு. பரமேஸ்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டியராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். அந்தப் பிரம்படி பாண்டியன் உள்பட சகலஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டி விட்டார். இதைப் பார்த்து கவி கேட்கிறார், அது சரி! உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படிக்கு மட்டும் தானா? நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும் போது ஒன்று; ஆனந்தத்தின் போது வேறு வேறா? சுவாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈஸ்வரனாகவும் இருப்பதை இந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை, பஞ்ச கிருத்யம் என்று ஐந்தாகச் சொல்வார்கள். இதில் மாயையால் மறைக்கிற காரியம் திரோதானம் எனப்படும். இந்த மாயையில் இருந்து விடுவிப்பதே, அவர் செய்கிற மகா பெரிய காரியம் அநுக்கிரகம்.