சபரிமலையில் நாளை மண்டல பூஜை: தங்க அங்கி இன்று வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2022 09:12
சபரிமலை: சபரிமலையில் நாளை (டிச., 27) மண்டல பூஜை நடக்கிறது. ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று (டிச., 26) சன்னிதானம் வந்தடையும். மண்டல பூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் கார்த்திகை 1ம் தேதி துவங்கிய 41 நாள் மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இந்த சீசனில் சில நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் தினசரி முன்பதிவு 90 ஆயிரமாக குறைக்கப்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. ஏழு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் சிறப்பாக நடந்த இந்த மண்டல சீசன் நாளை நிறைவடைகிறது.
டிச., 23 ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி இன்று மதியம் பம்பை வந்தடையும். தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் கணபதிகோயில் முன் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் அங்கி, மதியம் 3:00 மணிக்கு பேடகத்தில் வைக்கப்பட்டு தலைசுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்று தங்க அங்கியை சன்னிதானம் கொண்டு வருவர். மாலை 6:30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீகோயில் முன் அங்கியை வாங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவார். தங்கி அங்கி வருகையையொட்டி இன்று மதியம் 3:00 மணிக்கு பதில் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின் துவங்கும் நெய்யபிேஷகம் காலை 11:00 மணிக்கு நிறுத்தப்பட்டு கோயில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் சந்தனம் பூஜிக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிேஷகம் நடக்கும். மதியம் 12:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். மதியம் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டால் அதன் பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.டிச., 31 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கும். மகரஜோதி பெருவிழா 2023 ஜன., 14 நடக்கிறது.