பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
கார்த்திகை 2, 3, 4:
சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். வீண்செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதற்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி காரியங்களைச் சாதித்துக் கொள்வது நல்லது. புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே அமையும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகம் உண்டாகும். உடல் உபாதை நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் பெரும் சங்கடம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதல் கொள்ளலாம். பணிகளில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சிக்கல் இருக்காது. ஆனால் தனியார் துறையில் பணிபுரிவர்களுக்குப் பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். சக பணியாளர்களுடன் சுமூகமாக பழகுவது அவசியம். அதனால் பணிப்பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.
வாடிக்கையாளர் ஆதரவைப் பெறும் வகையில் வியாபாரிகள் செயல்படுவது அவசியம். தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வது அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது பொருட்களை வாங்குவது நல்லது. ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்கி அதிகளவில் இருப்பு வைக்காவிட்டால் விரயங்களைத் தவிர்த்து விடலாம். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கை உள்ளவர்களை அமர்த்துவது அவசியம். போட்டி நிறுவனங்களின் எதிர்ப்பு பலமாகவே இருக்கும். பங்குதாரர்களிடம் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
கலைத்துறையினருக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். ஓரளவு சோர்வடைந்தாலும், திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்பு கை நழுவிப் போகும். ரசிகர்களைக் கவர்வதிலேயே முழுக்கவனமும் இருந்து வர வேண்டும். சக கலைஞர்களைப் பகைக்காமல் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். சண்டை, இசை, நடனக் கலைஞர்களுக்கு கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கக் கூடும். பயணத்தின் போது கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. மின்னணுத்துறை மாணவர்கள் வளர்ச்சி காண்பர். தசாபுத்தி பலன்கள் பலமாக இருப்பவர்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்வர். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விடுதிகளில் தங்கிப் படிக்க நேரலாம். அவர்கள் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படலாம்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் கடினமான இருக்ககூடும். இருப்பின் மாற்றும் முகாம்களுக்குத் தாவ நினைக்காமல் விசுவாசத்துடன் இருப்பதே எதிர்காலத்திற்கு நல்லது. தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் ஆதரவையும் பெறுவதற்கு கடின உழைப்பு தேவை என்பதைப் புரிந்து செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு இதுவரை தள்ளிப்போன திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும். அது தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் கணவருக்கு அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு வருமானம் கிடைக்கும். வேலை காரணமாக பிரிந்த தம்பதி சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். வீண் குழப்பங்களை கைவிடுவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை.
பரிகாரம்: துர்கை வழிபாடு துன்பம் போக்கும். வெற்றி தரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 7
நிறம்: வெள்ளை, நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
ரோகிணி
தன்னம்பிக்கை கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சியைச் செம்மைப்படுத்தி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் நடத்துவர். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும் போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் பிறர் சொன்ன ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் பணம் பெற்றவர்கள் நன்றி பாராட்டுவது குறைவாகவே இருக்கும். உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தினால் பெரிய மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம்.
பணியாளர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானம் பெருகும். சிலர் விருப்ப ஓய்வு பெற்று தொழில், வியாபாரத்தில் ஈடுபடக் கூடும் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். வேலை நிமித்தமாக பயணங்கள் ஏற்படக் கூடும். தனியார் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியடைக் கூடும். சிலர் பணியுடன் தொழில் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை கொள்வீர்கள். சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக் கூடும்.
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருக்கும். நீங்கள் தரமான பொருள்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது. கணிசமான லாபமும் அதிக கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.
கலைத்துறையினர் வாய்ப்பைத் தேடி அலைந்த நிலை மாறி முன்னனி நிறுவனங்கள் தாமே தேடி வந்து வாய்ப்பு அளிப்பர். திறமையை வெளிப்படுத்தி ரசிகர் அபிமானம் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் பெருமையும், புகழும் நாடெங்கும் பரவும். உங்கள் அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணம் சிலருக்கு அமையக்கூடும்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவர். கல்விச் சலுகை பெறக்கூடிய வாய்ப்புண்டு. விளையாட்டு, போட்டிகளில் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள். உயர் படிப்புக்காக வெளிநாடு செல்லக் கூடும். இறுதியாண்டு மாணவர்கள் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
அரசியல்வாதிகளின் தன்னலமற்ற தொண்டுக்குப் பாராட்டு குவியும். தலைமையின் நன்மதிப்பும், தொண்டர்களின் ஆதரவும் கிடைக்கும். பதவிகள் தேடி வரும் உங்கள் பொருளாதார நிலை வளர்ச்சியடையும். சேமிப்பு பெருகும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்குவீர்கள்.
பெண்களுக்கு பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவர். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்ப முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவரும் அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு மனம்போல மாங்கல்யம் அமையும்.
பரிகாரம்: ஞாயிறன்று சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். சமூக அந்தஸ்து உயரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
நிறம்: வெள்ளை, சிவப்பு
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
மிருகசீரிடம் - 1, 2: செவ்வாய் பகவானை நட்சத்திர நாதனாகக் கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்ற உங்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் புத்திர பாக்கியம் அல்லது பேரக்குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனை பிறக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மிகம், தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள். அதே நேரம் உழைக்காவிட்டால் சரியான இலக்கைக் குறித்த நேரத்தில் அடைய முடியாமல் போகலாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் தேவைகளையும் சரியாக பூர்த்திச் செய்யுங்கள். அதோடு யாருக்கும் வாக்குக் கொடுக்காமலும், முன்ஜாமின் போடாமலும், உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.
பணியாளர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சக பணியாளர்களிடம் சுமூகமாக பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பின் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் மீது புகார் எழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களுக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகை வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும்.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. யோகாசனப் பயிற்சி மூலம் ஞாபகத் திறனை பெருக்கி கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி சில தடைகளுக்குப் பிறகு நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவர். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை கைவிடாமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் சேரும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.
பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிக செலவு செய்ய நேரலாம். சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புதிய வாகன சேர்க்கை இருக்கும். சொந்த மனையில் குடியேறும் கனவு நிறைவேறும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாட்டால் பிரச்னை, கடன் தொல்லை மறையும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6, 9
நிறம்: பச்சை, வெளிர் நீலம்
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீசாஸ்தாய நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.