பதிவு செய்த நாள்
31
டிச
2022
09:12
திருப்பதி: Darshan at Tirumala Eyumalayan temple stop for six months?திருமலை ஏழுமலையான் கோவிலில், தரிசனம் மார்ச் முதல் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது; இதை பக்தர்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனந்தநிலையம் கருவறை கோபுரத்தில் தங்கம் முலாம் பூசும் பணிகளுக்காக, தரிசனம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல. தேவஸ்தான ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு, திருமலை ஏழுமலையான் கோவிலில் உள்ள ஆனந்த நிலையத்தில் தங்க முலாம் பணியைத் துவங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளது.
வேத சடங்குகள்: இதையடுத்து, 2023ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாலாலயம் அமைக்க அர்ச்சகர்கள் முடிவு செய்து உள்ளனர். முதலாவதாக, பாலாலயம் கட்டுவதற்கு தேவையான வேத சடங்குகள் ஒரு வாரம் செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக, கருவறையில் உள்ள மூல மூர்த்தி ஜீவகாலம் கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு, பாலாலயத்தில் அமைக்கப்படும் ஏழுமலையான் சிலைக்கு மாற்றப்படும். இதன்பின், ஆனந்த நிலையத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெறும்.
ஆராதனை: இதற்கு ஆகும் ஆறு மாத காலங்களிலும், பக்தர்கள் வழக்கம் போல் மூலமூர்த்தியை சன்னிதியில் தரிசிக்கலாம். பாலாலயத்தில் உள்ள சிலையையும் பக்தர்கள் தரிசிக்கலாம். சன்னிதியில் உள்ள மூலமூர்த்திக்கும், பாலாலயத்தில் உள்ள விக்ரகத்திற்கும் அதிகாலை முதல் இரவு தனிச் சேவை வரை அனைத்து ஆராதனைகளும் செய்யப்படும். உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து கல்யாணோற்சவம் மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் வழக்கம் போல் நடைபெறும். கடந்த, 1957- - 58ல் ஆனந்த நிலையத்தில் தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018ல் ஏழுமலையான் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணத்திற்காக பாலாலயம் அமைக்கப்பட்டபோதும், பக்தர்களுக்கு ஏழுமலையான் மூலமூர்த்தி தரிசனம், உற்சவ மூர்த்திகளுக்கு கல்யாணோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகள் நடைபெற்றதாக பதிவுகள் உள்ளன. எனவே, ஆறு மாதங்களுக்கு ஏழுமலையான் மூலமூர்த்தியை தரிசனம் செய்ய முடியாது என சில டிவிக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும்தவறான தகவலை நம்ப வேண்டாம். இவை உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறு அவர் கூறினார்.