பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது. இன்று இரவு 8:00 மணிக்கு நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இக்கோயிலில் டிச., 28 அன்று இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா விழா துவங்கியது. அன்று தொடங்கி தினமும் காலையில் மாணிக்கவாசகர் ஆடி வீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை வாசித்தல் தொடர்ந்து சோடச உபச்சாரங்கள், தீபாராதனைகள் நடந்து வந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடு நடந்து, கோயில் மகா மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்வு நடக்கிறது. பின்னர் அதிகாலை 4:00 மணிக்கு தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மூர்த்திக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று இரவு 8:00 மணிக்கு பச்சை சாத்தி புறப்பாடு மற்றும் அதிகாலை 5:00 மணிக்கு ஆரத்ரா அபிஷேகமும், மகாதீப ஆராதனையும் நடக்க உள்ளது.
*இதேபோல் எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலிலும், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலிலும் ஆருத்ரா விழா நடக்கிறது.