சபரிமலையில் 14ல் மகரசங்கரம பூஜை; வெடி வழிபாட்டுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 11:01
சபரிமலை : சபரிமலையில் இந்த ஆண்டு மகரசங்கரம பூஜை வரும் 14ம் தேதி இரவு 8:45 மணிக்கு நடக்கிறது. ஜன.15 முதல் 19 வரை படிபூஜை நடக்கிறது. இந்த ஆண்டு வெடி வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஜன. 14ல் நடக்கும் மகரஜோதி விழாவுக்கு இன்னும் எட்டு நாட்கள் உள்ளன. அன்று மகரசங்கரம பூஜை இரவு 8:45 மணிக்கு நடக்கும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடப்பது சிறப்பம்சம். இந்த நேரத்தில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன் வாயிலாக கொடுத்து விடப்படும் நெய்த்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷகம் செய்யப்படும். பின், அந்தத் தேங்காய் மூடிகளில் நெய் பிரசாதம் வழங்கப்படும். மகரஜோதி தரிசனம் முடிந்தவுடன், ஜன.15 முதல் 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். மகர ஜோதிக்கு முன்னதாக, 12ம் தேதி பிரகார சுத்தியும், 13 ல் பிம்பசுத்தியும் நடக்கிறது.
கூட்டம் அதிகம்: சபரிமலையில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பெரிய நடைப்பந்தலில் நீண்ட வரிசை நிற்கிறது. சரங்குத்தியின் கீழ் பகுதியில் இருந்து பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர், இதற்கிடையே, மாளிகைப்புறளத்தில் வெடி கூடாரத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயம் அடைந்ததால், சபரிமலையில் இந்த ஆண்டு வெடி வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு விசாரணைக்கு பத்தணந்திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.