பதிவு செய்த நாள்
27
ஜன
2023
08:01
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜன.,27) காலை 8:15 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வனை திருக்கல்யாணம் நடக்கிறது. ராஜகோபுரம், தங்க விமானங்களில் ெஹலிகாப்டர் மூலம் மலர் துாவப்படுகிறது. இதனால் பழநி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இக்கோயிலில் 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அதன்படி 2018ல் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. 16 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக 2 மாதங்களாக கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன. ஜன., 18ல் ராஜகோபுரம், உப சன்னதிகளில் கோபுர கலசங்களில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. ஜன., 21 ல் திருஆவினன்குடி கோயிலில் கஜ, பரி ஆநிரை பூஜைகள் நடந்தது. அர்ச்சகர்கள் சார்பில் சண்முக நதியில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. வேள்வி பூஜைக்காக சூரியஒளியிலிருந்து அக்னி எடுத்து வர ஜன., 23ல் வேள்வி பூஜை துவங்கியது.
இன்று காலை 8:15 மணிக்கு வேள்வி சாலையிலிருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்க தேவாரம், திருப்புகழ் பாடப்படும். தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் தங்க விமான கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் 8:45 மணிக்கு கோயிலில் உள்ள தெய்வங்களின் கோபுர சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. 9:15 மணிக்கு மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் நமது தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.