பதிவு செய்த நாள்
06
பிப்
2023
10:02
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேரோட்டம், பக்தர்கள் வெள்ளத்தில், ‘அரோகரா’ கோஷம் அதிர கோலாகலமாக நடந்தது. சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
மதியம், 3:00 மணிக்கு, முதலில் விநாயகர் தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கந்தசாமி, தங்க கவசத்தில் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்து, மேள தாளம் முழங்க, கரகாட்டம், காவடி ஆட்டம் ஆடிய பக்தர்கள் புறப்பட தேரோட்டம் தொடங்கியது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷம் எழுப்பி, வடம் பிடித்து தேரை இழுத்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் தானியங்கள், உப்பு, மிளகை தேர் மீது வீசினர். தைப்பூச விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பால், பன்னீர், இளநீர் புஷ்ப காவடிகளை சுமந்தும் கோவிலுக்கு வந்தனர். திருச்செங்கோடு டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை இரவு சத்தாபரணம், நாளை மறுநாள் வசந்த உற்சவத்துடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.