ஏகாம்பரநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் கண்பார்வை பெற்ற உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 08:03
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பாடல் பாடி இடக்கண் பெற்ற உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் முதல் தலமாக விளங்கி வருகிறது. சைவ குரவர்கள் நால்வரில் சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனின் சாபத்தால் தன் இடது கண் பார்வையை இழந்தார். பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று இறைவனை போற்றி பாடி இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார். இந்த நாளை ஆண்டுதோறும் சிவனடியார்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த உற்சவம் நேற்று ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேகம் நடந்தது. பின் ஏகாம்பரநாதர் மூலவர் சன்னிதி முன் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளினார். இறைவனை பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சிவனடியார்கள் பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் பல்லக்கில் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.