பதிவு செய்த நாள்
14
மார்
2023
08:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று பெரிய சக்கர தீவெட்டி பவனி நடந்தது. இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இக்கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று உற்சவமூர்த்திக்குபஞ்சாபிஷேகம், உஷபூஜை, உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் யானை மீது சந்தனகுடம் பவனி, பகல் அனந்தமங்கலத்தில் இருந்து காவடி பவனி,அம்மனுக்கு சந்தன காப்பு, உச்சகால பூஜை, சாயரட்சை பூஜை , அத்தாழ பூஜை , இரவு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா நிறைவு நாளான இன்று (14ம்தேதி) பால்குளம் கண்டன் சாஸ்தாகோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி, காலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை அடியந்திர பூஜை நடக்கிறது. இப்பூஜையில் அம்மனை ஆவாகனம் செய்து திரிசூலத்தில் ஏற்றி கோவிலின் முன்புள்ள மண்டபத்தில் வைத்துவிட்டு 4.30 மணிக்கு திருநடை சாத்தப்படும். குருதி காணும் குத்தியோட்ட நிகழ்ச்சி நடப்பதாலும், கோவிலின் வெளியே அசைவ உணவு பொங்கலிட்டு உண்பதாலும் பகல் நேரத்தில் கோவில் நடை திறப்பதில்லை. காலை 6 மணி முதல் குத்தியோட்டம் மற்றும் பூமாலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுத்திகலச பூஜை முடிந்து நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை , இரவு 8.30 மணிக்கு அலங்கார தீபாராதனை , 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, இரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.