பதிவு செய்த நாள்
28
மார்
2023
09:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை சூரிய பிரபையில், ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலி அம்பிகையும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தனர். இரவு சந்திர பிரபையில் ஏகாம்பரநாதரும், அம்பிகை அன்ன வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். ஆறாம் நாள் உற்சமான வரும் 31ல், 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் உற்சவமும், ஏழாம் நாள் உற்வசமான ஏப்., 1ல் தேரோட்டமும் நடக்கிறது. அம்மனை மாலையால் மறைப்பதாக குற்றச்சாட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் உற்சவர் பக்கத்தில் உள்ள பாகம் பிரியாள் அம்மனை மாலையால் மூடியது குறித்து பக்தர்களிடையே பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பரநாதர் பக்தர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவத்தின் போது, தொன்மையான உற்சவர் தெய்வ திருமேனியை உரிய பாதுகாப்புடன் வீதியுலா செல்ல சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உற்சவர் மண்டபத்தில் இருந்து, சுவாமி வீதியுலா சென்று வரும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, ஏகாம்பரநாதர் சுவாமி பக்கத்தில் உள்ள பாகம் பிரியாள் திருமேனி சிலை பக்தர்களுக்கு தெரியும் படி, கனம் குறைவான பூ மாலைகளை சாற்றியும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு வழங்கினர். அதன்படி கடந்த ஆண்டு உற்சவத்தின்போது, ஒரு சாத்துபடி மாலைதான் போட வேண்டும் என, அப்போதைய கோவில் செயல் அலுவலர் 2022 பிப்., 16ல் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் நடப்பு ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின், பவழக்கால் சப்பரம் உற்சவமான நேற்று முன்தினம் சுவாமி பக்கத்தில் உள்ள பாகம்பிரியாள் அம்மன் திருமேனி சிலையை முழுதும் மறைத்து விட்டனர்.
ஒரு சாத்துபடி மாலை தான் போடவேண்டும் என செயல் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில், ஒன்றரை படி மாலைகளை சாற்றி அம்மனை மறைத்து விட்டனர். இது செயல் அலுவலர் முன்னிலையில் நடந்தது. அப்போது, அம்மனை ஏன் மறைக்கிறீர்கள் என, அர்ச்சகரை கேட்டதற்கு, இ.ஓ., சொல்லித்தான் ஒன்றரை படி மாலை போட்டோம். எதுவாக இருந்தாலும் இ.ஓ., விடம் கேளுங்கள் என்றனர். சுவாமி பக்கத்தில் உள்ள பாகம் பிரியாள் அம்மனை மாலைகள் போட்டு மறைக்கின்றனர். காரணம் அம்பாளுக்கு உண்டான விலை உயர்ந்த திருவாபரணங்களை திருடி விட்டனர். இதனால், தொடர்ந்து அம்மனை மாலை சாற்றி மறைத்து வருகின்றனர். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.