பதிவு செய்த நாள்
21
செப்
2012
01:09
மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்... திருமாலிருஞ்சோலை அழகரிடம் இப்படி வேண்டிக் கொண்டாள், ஆண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...! கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் வந்தது, யதிராஜரான ராமானுஜருக்கு. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?நூறு தடா அதாவது நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதித்து, ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் நம் கோயில் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்ஸவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு. அக்காரவடிசல். அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் கேட்டது கிடைக்கும்.
அக்காரவடிசல் எப்படி செய்வது?
தேவையானவை: பச்சரிசி கால் கிலோ, பச்சைப் பருப்பு-100 கிராம், வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன், பச்சைக் கற்பூரம் கொஞ்சம் (வாசனைக்காக கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். அதிகமானால், கசப்பாகிவிடும், கவனம்). இவை தவிர, நிறைய பால், நிறைய நெய்( மேலே தரப்பட்டுள்ள அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம். கோயிலில் இதெல்லாம் கணக்கே பார்ப்பதில்லை.
செய்முறைக்கு முன்பாகவே முக்கியமாக கவனிக்க வேண்டியவை: அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. இரண்டாவது முக்கியக் குறிப்பு. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும். மூன்றாவது விஷயம்... அக்காரவடிசல்ல முந்திரி, திராட்சை இன்ன பிறவற்றைப் பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது. (வாயில் போட்டால், நாக்கில் வழுக்கி தொண்டைவழியாக அப்படியே உள்ளே போவதற்குத் தடையாக எதுவும் இருக்கக் கூடாது) நாலாவது பாயின்ட். அடுப்பு சீராகவும் மிதமாகவும் எரியவேண்டும். சீக்கிரம் செய்ய ஆசைப்பட்டு அடுப்பைப் பெரிதாக எரியவிடக்கூடாது. அனைத்தையும் விட முக்கியமானது, அடுப்பைப் பற்றவைத்தது முதல் அக்காரவடிசலை இறக்கும்வரை ஆண்டவன் நினைவோடு இருப்பது தான்.
செய்முறை: அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள். அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.
வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள். பால்... பால்... மேலும் பால்...! பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள். கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள். நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். உங்கவாய் மட்டுமல்லாமல் வாழ்க்கையும் இனிக்கும்.