பதிவு செய்த நாள்
13
ஏப்
2023
08:04
சோபகிருது ஆண்டு உத்தராயண புண்ணிய காலம், சித்திரை 1, (2023 ஏப்.14) வெள்ளிக்கிழமை, தேய்பிறை நவமி, திருவோண நட்சத்திரம், கடக லக்னம், மீன நவாம்சம் கூடிய சுப நாளில் மதியம் 2:05 மணிக்கு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.
ஆண்டு வெண்பா
சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்
உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகும் என்றே யுரை.
பழமையான இந்த உலகம் செழிக்கும். பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர்.
பொது பலன்கள்: வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி கனரகத் தொழில்கள் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவர். உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நவீன ஏவுகணைகள் , புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் வாங்கப்படும். நம் நாட்டின் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பால் ஏற்றுமதி பெருகும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்.
கிரக பாதசாரம்
கிரகம் நட்சத்திரம் சாரம்
லக்னம் - மகம்1 - கேது
சூரியன் - அசுவினி 1 - கேது
சந்திரன் - திருவோணம் 1 - சந்திரன்
செவ்வாய் - திருவாதிரை 3- ராகு
புதன் (வ) - அசுவினி 4
குரு - ரேவதி 4 - புதன்
சுக்கிரன் - கார்த்திகை 4 - சூரியன்
சனி - அவிட்டம் 3- செவ்வாய்
ராகு - அசுவினி 3 - கேது
வளமான வாழ்வுக்கு...: தமிழ்ப்புத்தாண்டன்று விஷுக்கனி தரிசனம் செய்வது சிறப்பாகும். இதற்காக பூஜையறையில் மாக்கோலமிட்டு மரப்பலகை மீது நிலைக்கண்ணாடியை வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுவார்கள். பூக்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பருப்பு வகைகளை தட்டுகளில் நிரப்பி வைப்பர். மா, பலா, வாழை, வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூக்களையும் அடுக்குவர். அதிகாலையில் இதைக் காண்பதற்கு ‘விஷுக்கனி தரிசனம்’ என்று பெயர். அதன்பின் பெற்றோரிடம் ஆசி பெற்று பணம் பெறுவர். இதனைக் ‘கை நீட்டம்’ என்பர். இப்படி செய்தால் ஆண்டு முழுவதும் வளமான வாழ்க்கை அமையும்.